நீங்கள் இருக்கிறீர்கள் இதை நீங்கள் அறிவீர்கள் . உங்களின் இருப்பு உணர்வு உங்களில் எங்கு மையம் கொண்டுள்ளது? இதை நீங்கள் ஒரு ஆழ்ந்த தியானிப்பின் மூலமே அறிந்துணர முடியும். உங்களின் இருப்பு உணர்வை நீங்கள் அறியும்போது அந்த உணர்வு ஒரு காட்சியாகவோ அல்லது ஒரு சப்த உணர்வாகவோ , ஒரு ருசியாகவோ , ஏன் உங்களின் ஐம்புல உணர்வுகளில் ஒன்றாகவோ அது இருக்காது.நீங்கள் இதுவரை அறியாத ஒரு உணர்வாகவே அது இருக்கும். அது ஆறாவது ஒரு உணர்வாகவே இருக்கும். உங்களின் ஐம்புல உணர்வுகள் ஒரு முழுமையை நோக்கிய ( குறையின் தவிப்பு- incomplete-குறைகுடம். ) உணர்வுகளே . இந்த ஆறாவது உணர்வோ முழுமையானது ( absolute-நிறைகுடம் ) அனைத்தையும் உள்ளடக்கிய,முழுநிறைவான , பூர்த்தியான,பூரண தன்மையானது. இந்த உங்கள் இருப்புணர்வின் மையத்திலிருந்து - இப்பிரபஞ்சத்தின் மகா இருப்புணர்வை நோக்கி இந்த இரு உணர்வையும் இணைப்பதே ஞான நிலையையடைதல் என்பது. அந்த பிரபஞ்ச மகா இருப்புணர்விலிருந்து விகசித்து, உணர்வு, எண்ணமாக, எண்ணம் பொருளாக விகசித்து விரிவடைவதே இப்பிரபஞ்சம்.அங்கிருந்தே நீங்களும் வந்தீர்கள் . உங்களுடைய இருப்புணர்வு அந்த மகா இருப்புணர்வின் தொடராகும். விஷயம் என்னவென்றால்,உங்களுள் நிகழும்-உங்களுள் துவங்கி உங்களுள் நிறைவாகும் - இந்த இருப்புணர்வின் இணைப்புக்கு இடையில் ( தரகர்கள் - கடவுள் , மதம் , குரு - எவரும் கிடையாது ஏன், இங்கு எந்த வியாபாரமும் கிடையாது ) உங்களுக்குள்ளே வந்து கடை விரிக்கும் கூட்டம் தான் இவர்கள் . அதாவது உங்களுக்கும் உங்கள் மூலத்துக்கும் நடுவில். உங்களுக்கும் உங்கள் மூலத்திற்கும் இடையில் இருப்பது உங்கள் ( குறைவுள்ள )மனம் மட்டுமே! ( குறைவுள்ள )உணர்வுகள் மட்டுமே! அதையும் கைவிடும்போழுதே இருப்பு இணைப்பு நடக்கிறது. உங்களை காப்பாற்றிக்கொண்டிருக்கிற, காப்பாற்றிக்கொண்டிருந்த மனதையே நீங்கள் கைவிடும் பொழுது, உங்கள் உணர்வையே நீங்கள் கைவிடும் பொழுது இடையில் இவர்களுக்கு என்ன வேலை? ஒரு தனி மனிதனின் உள் உலகுக்குள் துளி நாகரீகமுமின்றி நுழையும் இந்த இடைத்தரகர்கள் தான் உலகுக்கு ஒழுக்கத்தை, நாகரீகத்தை கற்று தருபவர்கள்.
இவர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment