Monday, February 28, 2011

உங்கள் அறியும் தகவமைப்பை மாற்ற வேண்டும்.

நமக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த வாழ்க்கை முறை பிடிக்கவில்லை, அதில் ஏதும் சத்தியம் இல்லை, என தோன்றினால், சரி, இந்த வாழ்க்கையை பின்னும் சததியமுள்ளதாக வாழ வழிவகை என்ன? என புதுவாழ்க்கை முறையை தேட வேண்டும். அதற்கு முன் நமக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருக்கும் வாழ்க்கை முறை எப்படிப்பட்டது ? என்பதை அறிய வேண்டும். நமக்குள் புரோக்ராம் ஒன்று செய்யப்பட்டிருக்கிறது. இந்த உடல் சுமார் எழுபது டிரில்லியன் உயிர் செல்களை கொண்டது. இவ்வளவு செல்களும் தாய் தந்தையரின் இணைவிலிருந்து ( தாயின் கருமுட்டையை தந்தையின் விந்தணு துளைத்து இரண்டும் ஒன்று கலந்து தாயின் கருவில் தனி உயிராக துவங்கிய வளர்ச்சி இன்று எழுபது டிரில்லியன் உயிர் செல்களை கொண்ட ஒரு குழுவாக, உடல் எனும் அமைப்பாக, தோற்றமாக காட்சி தருகிறது. இந்த புரோக்ராம் பல தலைமுறைகளாக தொடர்ந்து நம்மை வந்தடைந்திருக்கிறது. ( தாய் தந்தை இணைவு துவங்கி - 50 வயது - இன்றுவரை நம்மி நடந்திருப்பது வேதியல் வினைகளே! ) இந்த புரோக்ராமை மையப்படுத்தியே வேதியல் வினைகள் நடக்கிறது. அல்லது இந்த புரோக்ராமே வேதியல் வினைகளை சரிபார்த்துககொள்கிறது. சரி, இது உங்களுக்குள் செய்யப்பட்டிருக்கும் புரோக்ராம். இந்த புரோக்ராமை வெளிக்காரணிகள் பாதிக்கவே செய்யும். வெளிசூல்நிலைகளான வெயில், மழை,காற்று தட்ப வெட்பம் இது போன்ற இன்ன பிற. எந்த மாதிரி சூழ்நிலைகளையும் தாங்கி, அல்லது ஒதுங்கி இருந்து தன்னை தகவமைத்துகொள்ளும் அளவுக்கு இந்த புரோக்ராம் செயல்படுகிறது. இந்த புரோக்ராம் தண்டுவடத்திலும், , மூலையிலும், சுரப்பிகளிலும் இந்த மூன்றிலும் கலந்து செயல்படுகிறது. இதிலிருந்து வருவதே உங்கள் எண்ணம், உணர்வு அனைத்தும்.

ஒருமனிதன்தன்னையேதனக்குஎப்படிஅறிமுகப்படுத்திக்கொள்கிறான், அடையாளப்படுத்திக்கொள்கிறான், என்பதையும் கவனிக்க வேண்டும். தான் யார்? நான் இந்த குடும்பத்தவன். என்னுடைய முழு ஈடுபாடும், செயலும் இந்த குடும்பத்துக்காக என்றும் மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்கள் குடும்ப வாசிகள். அடுத்து ஜாதீய வாசிகள், அடுத்து மதவாசிகள், அடுத்து தேசிய வாசிகள், ஏன்? கட்சி வாசிகள்கூட இருக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி பொதுவாக இவர்கள் பூமி வாசிகள். ( பூலோகவாசிகள் ) இவர்களையெல்லாம் இப்படி பந்தப்படுத்தி வைத்திருப்பது இந்த பூமியின் ஈர்ப்பு விசையான புவிஈர்ப்பு விசையே. வெளிக்காரணியான இந்த ஈர்ப்புவிசையில் நமது புரோக்ராம் கட்டுப்பட்டு நம்மை இத்தனை விஷயங்களில் பந்தபடுத்தியுள்ளது. இந்த ஈர்ப்பு விசையே முதலாமவருக்கு குடும்ப ஈர்ப்பு விசையாகவும், அடுத்தவருக்கு, அடுத்தவருக்கென செயல்படுகிறது. அது அவர்களை அவர்கள் அறிமுகப்படுத்திக்கொண்ட விதம், அடையாளப்படுத்திக் கொண்டவிதம்.

உண்மையான சத்தியம் என்ன? நான் யார்? இந்த பூமியில் நான் பிறந்ததின் காரணம் என்ன? இந்த நான் என்பது என்ன? நான் என்பதே ஒரு கற்பனா ரூபம் என அறிந்த பின் இனி செய்ய வேண்டியது என்ன? அந்த மூல சத்தியம் என்ன? இந்த கேள்விகள் எழுந்து இந்த பிரபஞ்சத்தின் ஆதாரம் என்ன? என்று நோக்கும்போது - ஒரு சரியான உண்மையை நாம் இப்போது இருக்கும் உடல் தகவமைப்பில் அறிந்து கொள்ள முடியாது என தெரிய வருகிறது. இப்போது நம்மில் இயங்கும் புரோக்ராம் நம்மை அனைத்தின் மீதும் பந்தப்படுத்தி, இந்த பந்தத்திலிருந்து விடுபட மறுக்கும் புரோக்ராம் அமைப்பு. இந்த அமைப்பில் ஒரு மனிதராவது போதும் என திருதியுற்று மரித்தாரா என்றால் 'இல்லை' என்றே பதில் வரும். ஒரு பொருளிலோ, ஒரு உறவிலோ, ஒரு கற்பனையிலோ பந்தப்பட்டிருக்கும் பொழுது சரியான உண்மையை நாம் அறிய முடியாது.

ஆனால் நம்முடைய அடிப்படைத்தன்மை என்னவோ திருப்தியையும் , பூரணத்தையும் எதிர்கொண்டதாக இருக்கிறது. அந்த திருப்தியையும், பூரணத்தையும் நாம் காண வேறு ஏதாவது வழிமுறைகள் உண்டா? என தேட வேண்டியிருக்கிறது. இப்படி பல காலமாக மனித குலம் தேடிக்கொண்டிருக்கிறது. கண்டடைந்தவர்களும் ஏராளமானவர்கள். கண்டடைந்தவர்கள் தங்களை “நாங்கள் இந்த பூமிக்கு மட்டும் சொந்தமில்லை, இந்த பிரபஞ்சத்துக்கே சொந்தமானவர்கள்” என்று சொல்லியிருக்கிறார்கள். நீங்களும் பிரபஞ்சவாசியாக வாழ விரும்பினால், உங்கள் அறியும் தகவமைப்பை மாற்ற வேண்டும்.

இந்த புரோக்ராம் மாற்றம் என்பது வேதியல் வினைகள் மூலமே சாத்தியப்படும்.
இந்த வேதியல் வினைகளை எப்படி செய்வது?

புறக்காரணிகளால் நமது புரோக்ராம் மாறுதலடையும் வாய்ப்புள்ளது. ஆனால் நாம் பல காலம் அவைகளை தவிர்த்தே வந்துள்ளோம். நமக்கு வெளியே நெருக்கமாக புவிஈர்ப்பு விசையும், வெளியில் கிரக ஈர்ப்பு விசைகளும், அதற்க்கு அடுத்து சூரிய ஈர்ப்பு விசையும், அதை அடுத்து உடுமண்டல ஈர்ப்புவிசையும், அதையும் அடுத்து உடுமண்டல தொகுப்பு ஈர்ப்பு விசையும்,அதையடுத்து, இப்பிரபஞ்ச ஈர்ப்பு விசையும்,அதையடுத்து, சூழ்ந்து நிற்கும் சூன்ய ஈர்ப்பு விசையுமென மொத்த விசைகளும் நம்மை சூழ்ந்துள்ளன. இதில் ஓர் ஒழுங்கான அமைப்பும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அந்த ஒழுங்கான ஈர்ப்பு விசைகளை நாம் நமக்குள் அனுமதிததோமானால், ஏற்கனவே நம்மிடம் உள்ள இந்த பந்த தன்மை அகன்று, ஒரு நிறைவான, குறைவற்ற, பூரண தன்மையை அடைவோம். அந்த ஒழுங்கான ஈர்ப்பு விசை நம்மில் நுழைந்து நமது புரோக்ராமில் சரியாக தகவமைத்து அந்த பரிபூரண சத்தியத்தை நாம் அறிய வழிவகை செய்து தரும். நம்மையும் பூரணத்தன்மையில் நிலை நிறுத்தும். உங்கள் புரோக்ராம் தன்னிறைவுறும்.

Sunday, February 27, 2011

சத்தியலோகம்.

அறியாமையுலகும் - சத்தியலோகமும்.

அந்த அசைவற்ற, நிலையான பரிபூரண சத்தியம் , அதிலிருந்து உதித்த, முழுமையற்ற, குறைபாடுடைய, நிலையற்ற, சதா சஞ்சரிக்கும் சதா மாற்றமடையும், உருமாறும் இயக்கமுறும் 'மாயா' அறியாமை என 'கலந்து' நிலைமை இருக்கிறது.

இதில் நாம் ( கண்ணில் காணுவது தான் நிலையானது எனும் )அறியாமையோடு அறியாமையாக கலந்து உறவாடுவோமா ? இல்லை, எது நிலையான சத்தியம் என தேடி இனம் கண்டு சத்தியத்தோடு சத்தியமாக இணைந்து வாழ்வோமா?

இந்த பொருட்களாலான பிரபஞ்சமே நிலையற்ற ஒன்றுதான். சதா மாற்றமுறுவதுதான். ( மனிதன் தோற்ற பிரமையில் மூழ்கிக்கிடககிறான்.) - ஒரு பொருளுக்கு திடத்தன்மையையும், தோற்றத்தையும் அளிப்பது . எலக்ட்ரான்களின் அதிவேக விளைவுகளே என்பதை முன் கட்டுரைகளில் பார்த்தோம்- இந்த மாயா பிரபஞ்சத்திலிருந்து கிளைத்த அறியாமைகள்தான் அனைத்து உயிர்களும், நீங்களும், நானும்.

நம்மில் கிளைக்கும் அறியாமைகள்தான் மனம் எனும் எண்ணங்களும், உணர்வும். ஆனால் இந்த அறியாமைகள் எல்லாம் எதில் நிலைகொண்டிருக்கின்றன என்றால்? அந்த அசைவற்ற, நிலையான பரிபூரண சத்தியத்திலே!

அந்த அசைவற்ற, நிலையான பரிபூரண சத்தியம் ஒவ்வொரு அணுவிலும் கோர்த்து நிற்கிறது.

அனைத்து அறியாமைகளையும் எலக்ட்ரான் துகள்களே நடத்துகின்றன!. அதற்க்கு இணையாக இருப்பது புரோட்டான் துகள்கள். இதில் எலக்ட்ரான் துகள்களே 'வெளிநோக்கி' செயல்புரிவது.

உங்களுக்கு இருப்பது போலவே, இந்த பிரபஞ்சத்துக்கும் தேடல் இருக்கிறது. முழுமையுறா அனைத்துக்குமே தேடல் இருக்கிறது. அந்த முழுமையுறா தன்மையே அறியாமை. இது அங்கிங்கெனாதபடி பிரபஞ்சமெங்கும் பரவி, விரவிக்கிடக்கிறது. அதுதான் உங்களிடமும் செயல்படுகிறது.

நீங்கள் கோடிக்கணக்கான பிறவிகளாக அந்த முழுமையைத்தான் தேடிக்கொண்டிருக்கிறீர்கள்.

அந்த முழுமையை அடைந்த எதுவும் எதையும் தேடுவதில்லை. அது அந்த முழுமையோடு முழுமையாக முழுமையாகி விடுகிறது.

அந்த முழுமையே சத்தியலோகம்.அறிவு என்பது நிலையான அசைவற்ற சத்தியம், அறியாமை என்பது இயக்கமாயிருக்கிற இயக்க பிரபஞ்சம் முழுவதுமே!.

Friday, February 25, 2011

ஈர்ப்பு விசைகள்

நமது உடலில் மின் தன்மை அறிவாகவும், காந்த தன்மை உணர்வாகவும் செயல்பட்டு வருகிறது. நிற்க!

முன் கட்டுரையில், - உங்கள் உணர்வு தளத்தில் உணர்வாக திகழ்வது ஈர்ப்பு விசையே . உங்கள் உணர்வு இக்கணம் , இக்கணம் எனும் விழிப்புணர்வுக்கு வந்து அதுவே அதிர்வாக மாறுகிறது.- என பார்த்தோம்.

நாம் புவிஈர்ப்பு விசையில் கட்டுண்டு பூமியோடு சார்ந்து செயல்படுகிறோம். நமது உடல் மீது புவிஈர்ப்பு விசையும், சூரியனின் ஈர்ப்பு விசையும், மற்றும் கோள்களின் ஈர்ப்பு விசைகளும் செயல்படுகிறது.

இதில் நம் மீது வலுவாக செயல்படும் விசை புவிஈர்ப்பு விசையே.( ஆனால், பூமியே சூரியனின் ஈர்ப்பு விசைக்கு கட்டுப்பட்டுத்தான் சுற்றுகிறது.) இன்னும் உடுமண்டல ஈர்ப்புவிசைகளும் இருக்கின்றன. இத்தனை விசைகளும் நமது காந்த புலன்மீது செயல்படுவதாலே இவ்வியக்கங்கள் நமக்கு உணர்வாக துலங்குகிறது.

இந்த உணர்வு தன்மையை நாம் தியான நேரத்தில் அதிர்வு தன்மையாக மாற்றுவதற்கு , நமக்கு வெளியிலிருந்து, நம்மை ( பூமியை ) நோக்கி ஈர்க்கும் சூரிய ஈர்ப்பு விசையை நாம் நமக்கு உள் வாங்க வேண்டும். அதாவது நமது உடலிலுள்ள செல்களின் கனம் ( weight ) பூமியின் ஈர்ப்பு விசைக்கு கட்டுப்பட்டு,ஒரு கிறக்க நிலையில்( சுருண்டு ) கீழ் நோக்கியே செயல் பட்டுக்கொண்டிருக்கின்றன.

அந்த செல்களை மேல்நோக்கி ,விழிப்பாக ( OPEN ) புவிஈர்ப்புக்கு எதிராக செயல்பட வைக்க முடிந்தால் உணர்வு நிலை அதிர்வு நிலையாக மாற்றமடையும். ( இதனாலேயே தியானத்தில் அமரும் முன் நமது உடல் நேரடியாக பூமியின் மீது படாமல் எதாவது மரப்பலகையையோ , அல்லது எதாவது மொத்த துணிகளையோ ஆசனமாக அமைத்து அதன் மீதே அமருகிறோம்.) நமக்கு முன் வந்த மகான்களும் புவிஈர்ப்பு விசை குறைவாக செயல்படும் இடங்களான மலை உச்சி , அல்லது மிக உயரமான மலைப்பிரதேசம் ( இமயமலை ) போன்ற இடங்களில் வாழ்ந்து வந்தனர்.

இனி இந்த ஈர்ப்பு விசைகள் நம்மீது எப்படி செயல்படுகின்றன என்பதை பார்ப்போம்.

புவி ஈர்ப்பு விசையே நம் மீது அதிக வன்மையுடன் இயங்குகிறது. நாம் பூமியின் மிக அருகில் பூமியோடு ஒட்டியே இருப்பதால் நம் மீது வன்மையாக செயல்படுகிறது. ஒரு பொதுவான பிரபஞ்ச ஈர்ப்பு விசையானது நம் மீது ஒரு சிறு தாக்கத்தையே ஏற்படுத்த முடிகிறது. பூமியின் நேரடியான ஈர்ப்பு விசையான - சூரிய ஈர்ப்பு விசை- கூட நம் மீது அவ்வளவாக தாக்கத்தை ஏற்படுத்த முடிவதில்லை. இந்த ஈர்ப்பு விசைகள் நம் உடலின் எந்த பகுதியை மையப்படுத்துகிறது என கவனித்தால் தெரியும் , அது நமது முதுகு தண்டேயாகும்.

முதுகுத்தண்டை செங்குத்தாக நேராக நிறுத்தி வைத்தால், வெளியிலிருந்து வரும் சூரிய ஈர்ப்புவிசை நமது உச்சந்தலையில் துவங்கி நேராக கீழிறங்கி முதுகு தண்டு வழியாக, முதுகு தண்டின் நுனியை நோக்கி பிரவேசிக்க முயல்கிறது தெரிய வரும். ( இத்தனை வகை உயிர்களில் மனிதனுக்கு மட்டுமே முதுகு தண்டை நேராக நிமிர்த்தி வைக்கும் திறமை இருக்கிறது, காண்க ! )

நீங்கள் தியானத்தின் போது உங்கள் உணர்வின் மீது தியானித்து உணர்வின் அசைவ்களை குறைத்துக்கொண்டே வந்தால் அது சிற்றசைவாக, அதிர்வாக உங்கள் முதுகு தண்டின் நுனியான மூலாதாரத்தில் நின்று அனைத்து செல்களையும் மேல்நோக்கி அதிர வைத்தால், அந்த சூரிய ஈர்ப்பு விசை,உச்சந்தலையிலிருந்து கீழிறங்கி முதுகு தண்டின் வழியாக மூலாதாரத்துக்கு ஓடி வரும்.

நீங்கள் பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து விலகி, சூரிய ஈர்ப்பு விசைக்கு ஆட்படும்போது உங்கள் தேகமே ஒளிப்பிரவாகமாகும்.

நீங்கள் பூமியின் ஈர்ப்பு விசையில் செயல்படும் பொழுதே மனம்,மற்றும் உணர்வு செயல்படும்.
சூரிய ஈர்ப்பு விசைக்கு ஆட்படும்போது மனம் ஒளியாகவும், உணர்வு அதிர்வாகவும் செயல்படுவதை காண்பீர்கள்.

முன்பு பூமியின் ஈர்ப்புவிசையில் உங்கள் மூளை செயல் புரிந்ததற்கும் , இப்போது சூரிய ஈர்ப்பு விசையில் உங்கள் மூளை செயல் புரிவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அதாவது உங்கள் உடலிலுள்ள செல்கள் சராசரியாக இருக்கும்பொழுது உங்கள் மூளை செயல்பட்டதிற்கும், இப்போது செல்கள் மேல் நோக்கி இருக்கும்பொழுது செயல் படுவதற்கும் உள்ள வித்தியாசம் அது.

இப்போது உங்கள் உடலின் தகவமைப்பே தலை கீழாக மாறி செயல் படுவதை அறிவீர்கள்.

அநுபூதி நிலையில் தொடர்ந்து நீடிக்கும் மகான்களின் நடை முறை நடத்தைகள் வித்தியாசமாக இருப்பதற்கு இதுவே காரணம்.

Thursday, February 24, 2011

அர்த்தமே வேண்டாம் ஆனந்தமா யிரு.

நாம் இப்போது இன்பம் துன்பம் இரண்டையும் மனதின் துணை கொண்டே உணர்ந்து வருகிறோம்.
மனம், இந்த உணர்வு நமக்கு(உயிருக்கு)நல்லது, ஆகவே இன்பமாயிருக்கலாம். அல்லது , இந்த உணர்வு நமக்கு(உயிருக்கு) கெட்டதுஆகவே, இது நமக்கு துன்பம் என மனது சதா தணிக்கை செய்து கொண்டேயிருக்கிறது.

மனதால் தணிக்கை செய்து உணர்வது மட்டுமே புத்திசாலித்தனம் என நினைக்கிறோம். எந்த ஒரு உணர்வும் ஒரு காரண காரியத்தோடு, ஒரு அர்த்தத்தோடு இருக்க வேண்டும் என மனம் நினைக்கிறது -அப்படியே 'சரியாக' நடந்தால் - இப்போது உணர்வு, மனதின் கட்டுப்பாட்டில், கட்டுப்பட்டு இருப்பது மனதுக்கு உறுதியாகிறது. உணர்வு தனித்து உணர துவங்கினால் மனதால் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அது மனதின் சுயத்துக்கு விடப்பட்ட சவாலாக எண்ணுகிறது.

மனதின் சதா எதையாவது நினைத்துக்கொண்டேயிருக்கும் செயலைக்குறைக்க ஒரு உபயம்.

உணர்வு நிலையில்காரண காரியமின்றி சதா இன்பமாயிருங்கள். அவ்வப்போது மனம் ஓடிச்சென்று உணர்வை கவனிக்கும். ஏன் இப்படி இன்பமாக தானே உணர்கிறது என! காரணம் புரிந்தாலும், புரியாவிட்டாலும் " இன்பமயிருப்பது உயிருக்கு உகந்ததே! என விட்டு விடும். மனம் எந்த பாதிப்பும் அடையாது. அதே சமயம் மனதின் தேவையற்ற ஓட்டம் குறையும். உங்கள் கவனம் எப்போதும் உணர்வின் ஆனந்தத்திலேயே குவிக்கப்படுவதால், உங்களின் அத்தனை செல்களும் குதூகலமடையும். ஆகவே ' அர்த்தமே வேண்டாம் ஆனந்தமாயிரு'.

ஒளியே நான்.அதிர்வே நான்.

நமது மிக ஆழ்ந்த தியான வேளையில் நமக்கு புருவ மத்தியில் ஒளி தோன்றுவதை காணலாம். நாம் நமது மனம் , உணர்வு இரண்டையும் கடந்து இந்த அநுபூதி ஒளித்தனமைக்குள் நுழைய ஒரு இலகுவான உத்தி. இதோ!

அதாவது நமது மனமே தனது விருத்தியை குறைத்துக்கொண்டு வந்து தனது மூல நிலையான ஒளி நிலைக்கு வருகிறது. ( உங்கள் மனதில் விளக்கமாவது ஒளி எனும் அறிவேயாகும். ) அறிவே ஒளியாக திகழ்கிறது. உங்கள் மனமே இப்போது -தியான நிலையில்- ஒளியாக துலங்குகிறது.

உங்கள் உணர்வு தளத்தில் உணர்வாக திகழ்வது ஈர்ப்பு விசையே . உங்கள் உணர்வு இக்கணம் , இக்கணம் எனும் விழிப்புணர்வுக்கு வந்து அதுவே அதிர்வாக மாறுகிறது.

ஆக! உங்கள் மனம் ஒளியாக மாறிவிட்டது, உங்கள் உணர்வு அதிர்வாக மாறிவிட்டது. {நீங்கள் மனதையும், உணர்வையும் கடந்து விட்டீர்கள்.)

உங்கள் மனமே ஒளியாகவும், உங்கள் உணர்வே அதிர்வாகவும் மாற்றமடைந்திருக்கிறது.

நீங்கள் தியான வேளையில் இந்த ஒளியே நான். இந்த அதிர்வே நான். என உங்களை ஒளியாகவும், அதிர்வாகவும் அறிந்து அந்த அதிர்விலும், ஒளியிலும் வியாபித்திடுங்கள்.

நீங்கள் தியான வேளையில் ஒளியாகவும், அதிர்வாகவும் இருக்கிறீர்கள்.

விருத்தி.

நமக்கு 'நான்' எனும் விருத்தியும், அந்த பிரம்மத்திற்கு பிரபஞ்சமெனும் பொருள் விருத்தியும் உண்டானது வெளிநோக்கிய தன்மையினால் தான்.

நமது மனம் தற்ப்பாதுகாப்புக்காக வேண்டி வெளிநோக்கி செயல்படுவதால், இந்த மனதிற்கு நான் எனும் ( மாயசொரூபம் )சுயம் விருத்தியானது.

இந்தபிரபஞ்சத்தில் அணு நிலையில்எலக்ட்ரான் வெளிநோக்கி செயல் படுவதால் தான்( பொருளாக ) பிரபஞ்சம் மேலும் விருத்தியாகிக்கொண்டு இருக்கிறது.

இந்த வெளி நோக்கிய தன்மை நம்மில் குறைந்து அக நோக்கான தன்மையாக மாறுமானால், இந்த 'நான்' எனும் சொரூப விருத்தியை நிறுத்த முடியும்.

Tuesday, February 22, 2011

ஒளியுடல்.

நமக்கு ஸ்தூலமான இந்த உடல் உள்ளது போல மற்றும் இரு உடல்கள் இருக்கின்றது. ஒன்று உணர்வு உடல், மற்றொன்று ஒளியுடல்.இதே போல இந்த பிரபஞ்சத்துக்கும் மூன்றுவித உடல் இருக்கிறது. நாம் நேரிடையாக காணும் இந்த பூமி, மற்றும் சூரியனை கிரகங்களை, உள்ளடக்கிய சூரியக்குடும்பம், இதனையும் உள்ளடக்கிய பால் வீதி மண்டலம் , அதனையும் உள்ளடக்கிய இப்பிரபஞ்சம். இது ஸ்தூல பிரபஞ்ச உடல்.

அடுத்தது ஈர்ப்பு விசைகளாலான உணர்வு பிரபஞ்ச உடல்.

அடுத்து, இவை அனைத்தையும் தோற்றுவித்தும், மறையவைத்தும்,தோற்றுவித்தும் தன்னகத்தே வைத்துள்ள ஒளியுடல். இதை வேதத்தில் பிரம்மம் என்கின்றனர்.

நாமும் நமது தியான வேளையில் இந்த மூன்றுவித தன்மையுள்ள உடல்களையும் தரிசிக்க முடியும். நாம் நமது ஸ்தூல உடல் இயக்கங்களையும், ( மனதின் இயக்கமும் ) உணர்வு உடல் இயக்கங்களையும் கடந்து ( இந்த 'நான்' எனும் இரண்டு அறியாமைகளையும் விட்டு - ஒரு இம்மியளவு இயக்கமும் இல்லாது. ) தரிசிக்க முடிந்தால் இந்த ஒளியுடலை அடைவோம். அது ஏற்கனவே நம்மில் உள்ளது தான்.

இந்த, நமது ஒளியுடலில் நாம் தொடர்ந்து நிலைக்க முடிந்தால் அது எல்லைகளற்று இந்த பிரபஞ்ச பேருடலோடு இணைந்த ஒரே ஒளியுடலாக கலந்து பொருந்தி இருப்பதை அறிவோம்.

"எட்டுத் திசையும் பதினாறு கோணமும் எங்கும் ஒன்றாய் முட்டித்ததும்பி முளைத்தோங்கு சோதியை “ என்று பட்டினத்தார் பாடுகிறார்.

Sunday, February 20, 2011

இனி மரணம் உனக்கில்லை.

மரண பயம் இல்லாத மனிதரில்லை என்கிற அளவுக்கு இந்த மரண பயம் நம்மை தொற்றிக்கொண்டுள்ளது. இங்கிருப்பதெல்லாம் அப்படியே இருக்கும் ஒரு நாள் நான் தான் இறந்து 'இல்லாது' போய்விடுவேன் என்கிற அச்சம் நமக்கிருக்கிறது. இந்த இல்லாது போவது என்பது நமது மனதுக்கும், உணர்வுக்குமே பொருந்தும். இந்த 'நான்' ஐ இருப்பதாக பாவித்து வருபவை இவை இரண்டுமே!

மரணத்துக்கு பிறகு இல்லாது போவது இவை இரண்டுமே!.உண்மையிலேயே இல்லாமல் இருப்பவைதான் இவை.( நான் என்பது ஒரு அறியாமை. தான் இருப்பதாக ஒரு மாயா சொரூபத்தை நம்புவது.அதில் உண்மையோ , நிதர்சன்மோ இல்லை.அது மனதின் புனைவு. )

மனதின் புனைவும், மனம் சார்ந்த உணர்வின் புனைவும்கடந்த, தியான வெளியில் என்ன உள்ளதோ அதுவே உண்மை. அது நிலையானது.

உன் உடலை விட்டு உயிர் நீங்கியபின் , உன் உடலையும் எரித்து சாம்பலை கரைத்து விட்ட பின் மீதம் என்ன இருக்கிறதோ ( தியான வெளியில் என்ன உள்ளதோ ) அதுவேஉண்மை. அது எப்போதும் உள்ளது. நிலையானது. அதற்கு ஆதியில்லை, அந்தமுமில்லை.

தியானத்தில் உனது அறியாமைகளை நீ கடந்து இதில் பிரவேசித்து விட்டால், உனக்கு மரணமில்லை. இந்த மரணம் எதில் நிகழுமோ அதையே ( அறியாமை ) தொலைத்து விட்ட பின், இனி மரணம் எங்கு நிகழும்?

யதோதகம் சுத்தே சுத்தம் ஆஸிக்தம் தாத்ருகேவ பவதி /
ஏவம் முனேர் விஜானத ஆத்மா பவதி கௌதம //15// - ( கடோபநிஷத். )

பதவுரை : தெளிந்த நீரில் விடப்பட்ட தெளிந்த நீர் எவ்வாறு அதுவாகவே ஆகிறதோ அவ்வாறு உண்மையை உணர்கின்ற மகான் ஆன்ம வடிவமாகவே ஆகிறார்.

Friday, February 18, 2011

பழக்கதோஷமே மனதின் சுயம்.

இந்த தகவலை சற்று நிதானமாகவும், கவனத்துடனும் படிக்கவும். நமது ஆழ்ந்த தியானத்தில் அனைத்து செல்களும் விழித்து,ஒரே அதிர்வாக ஏகத்தன்மையுடன் புருவ மத்தியில் ஒளிரும் ஒளியில் கலந்து , எல்லைகளற்று, எங்கும் ஒரே ஒளிப்பிரகசமாக துலங்க,
அச்சமயம் நாம் நமது அறியமைகளான நான் எனும் எல்லையுடைய மனம், எனது எனும் எல்லையுடைய உணர்வு இரண்டையும் அந்த ஒளிப்பிரகாசத்திலேயே போட்டு ( எல்லைகளை) கரைத்துவிட எத்தனிக்கும்பொழுது,
மனது அவ்வளவு சீக்கிரம் ஒத்துவருவதில்லை. ஆனால், அதன் 'சுயம்' பலவீனமாக, ' எதையாவது தொடர்ந்து எண்ணிக்கொண்டேயிருப்பதை' நம்மால் அறிய முடிகிறது.
மனம் இந்த பழக்கதோஷத்தில் கட்டுப்பட்டு நிற்பது தெளிவாக தெரிகிறது. இந்த பழக்க தோஷத்தையே தனது சுயமாக மனம் எண்ணிக்கொண்டிருக்கிறதும் தெரியவருகிறது.
நடைமுறை வாழ்வில் நாம், மனதின் இந்த பழக்க தோஷத்தை படிப்படியாக குறைத்துக்கொண்டு வருதல் வேண்டும்.
தேவையில்லாது சதா எதையாவது எண்ணிக்கொண்டிருப்பதை குறைத்துக்கொண்டு வந்து, மன ஓட்டத்தைநிறுத்துதலும் வேண்டும்.

Wednesday, February 16, 2011

ஐம்புலன்களின் ஆதாரங்கள்.

கண்களின் நுகர்வு ஆதாரம் உணர்வில் அடங்கி இருக்கிறது.

காதுகளின் நுகர்வு ஆதாரம் உணர்வில் அடங்கி இருக்கிறது.

மூக்கின் நுகர்வு ஆதாரம் உணர்வில் அடங்கி இருக்கிறது.

நாக்கின் நுகர்வு ஆதாரம் உணர்வில் அடங்கி இருக்கிறது.

இந்த தேகத்தின் ‘மேலோட்டமான’ நுகர்வு ஆதாரம் மட்டுமே உணர்வில் அடங்கி இருக்கிறது.


தேக உணர்வின் அடியாதாரம், உணர்வு நிலை கடந்த, அதிர்வு நிலையான உங்கள் மூலப்பிரகிருதியில் இருக்கிறது.


இந்த பிரகிருதியை நீங்கள் அநுபூதி நிலையில் மட்டும் காண முடியும். இந்த பிரகிருதி முழு ஒளி ரூபமானதும், முழு அதிர்வு தன்மையும் கொண்டதாக இருக்கிறது.


இந்தமூலப்பிரகிருதியின் ஆதாரம் ‘இங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்துள்ள அந்த ஆதிப்பிரகிருதியுள் அடங்கி இருக்கிறது.

வாழ்வின் சாரம்.

நாம், ஏற்கனவே இந்த வாழ்க்கையை நுகர்வது நமது உணர்வே என்று பார்த்தோம். உணர்வின் நுகர்வு தன்மை இக்கணம், இக்கணம் என இக்கணத்திலே நுகர்ந்து விடுதல் அவ்வளவே!

நுகரப்படும் உணர்வை சேமிக்கவும் முடிவதில்லை, அதில் மிச்சம் மீதி எதுவுமில்லை.

நேற்று முழுவதும் குதூகலாமாயிருந்தேன் என்பதில் இப்பொழுது எதுவும் சுவாரஸ்யமில்லை. எந்த பயனும் இல்லை. அது கடந்த ஒன்று. இதற்கு முன் நொடி உணர்ந்தது கூட 'கடந்த' ஒன்றுதான்.

அவ்வப்போது உணர்வது மட்டும் தானா? பின்பு வாழ்வின் சாரம் என்பது இவ்வளவுதானா? மிகவும் நகைச்சுவையான விஷயம் வாழ்வின் சாரமே இவ்வளவுதான்.

சரி இப்படி உணர்வதினால் நமக்கு என்ன கிடைக்கிறது? ஒன்றுமே கிடைப்பதில்லை. ( அவ்வப்போது சற்று 'சேர்ச்சை'யாக இருப்பது தவிர!. )

இந்த சேர்ச்சையில் திருப்தியடைவது யார்?

சந்தேகமென்ன மனம் தான். இது சேர்ச்சையாக இருக்கிறது என தீர்மானிப்பதும் மனமே.

மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. வாழ்க்கையே இவ்வளவுதானா?

மனிதனுக்கு மட்டுமல்ல, இங்கு வாழும் உயிர்களுக்கும் இதே நிலைமை தான். இந்த பூமியில் உள்ள உயிர் தொகுதிகளுக்கே இதுதான் நிலைமை. அவ்வப்போது உணர்ந்து விடுதல் அவ்வளவே!. மொத்த வாழ்வின் சராமுமே இக்கணத்தில் நிகழும் உணர்வு மட்டுமே!

சகோதரா, உன் பார்வையில் ஒரு நாய் பிழைப்புக்கு என்ன அர்த்தமோ , இம்மியும் மாறாமல் உன் வாழ்வுக்கும் அதேயளவுதான் அர்த்தம்.

அமாம்,

இந்த மனம், இந்த உணர்வு இரண்டை மட்டும் நம்பி ( இதுதான் வாழ்க்கை என ) வாழ்பவனுக்கு இதற்கு மேல் இந்த வாழ்வில் பொருளில்லை

Monday, February 14, 2011

நுகர்வு திறன்.

நமக்கு இந்த வாழ்க்கையை நுகர்வதற்கு ஐந்து புலன்கள் இருப்பது தெரியும். கண், காது, மூக்கு, நாக்கு, தேகம் . இந்த தேக உணர்வு என்பதை நாம் முழுமையாக உணர்ந்ததில்லை. கண் என்பது ( அதனை சார்ந்த நரம்பு தொகுதி ) நமது உடலில் ஒரு பகுதி. காது என்பதும் ( அதனை சார்ந்த நரம்பு தொகுதி ) நமது உடலில் ஒரு பகுதி. மூக்கு என்பதும் ( அதனை சார்ந்த நரம்பு தொகுதி ) நமது உடலில் ஒரு பகுதி.அதேப்போல நாக்கு என்பதும் ( அதனை சார்ந்த நரம்பு தொகுதி ) நமது உடலில் ஒரு பகுதி.ஆனால் தேகம் என்பது உடலில் ஒரு பகுதியல்ல. அது ஓர் முழுமை. நாம் இந்த தேக உணர்வு பற்றி தெளிவான அறிதல் இல்லாது இருக்கிறோம். இந்த தேகத்தால் குளிர், வெப்பம் , வலி, எரிச்சல் போன்ற உணர்வுகளைத்தான் உணர்ந்திருக்கிறோம். அந்த புலனை நுட்பமாக கவனிக்க தவறி விட்டோம். இந்த புலனை உபயோகிக்கவும் நமக்கு தெரிவதில்லை.

நாம் இந்த புலன்கள் எல்லாவற்றையுமே ஏதோ மேலோட்டமாகவே உபயோகித்து வந்துள்ளோம். இந்த ஐம்புலன்களும் நமக்கு ஐந்து கருவிகள். இந்த ஐம்புலன்களையுமே கூர்ந்து கவனிப்பதில்லை நாம். இந்த வாழ்க்கையை சிறப்புடன் வாழ, இந்த கருவிகளை விட சிறந்த ஓன்று கிடையாது. நம்மிடம் நுகர்வு திறன் மிக குறைவாகவே உள்ளது. ( நமக்கு குடும்பத்தில், சமூகத்தில் எவ்வளவோ பிரச்னை. இதற்கெல்லாம் நேரமில்லை.) கூர்மையான கவனத்தோடு இப்பிரச்னையை நாம் அணுகினால் அப்போது தெரியவரும் நாம் எவ்வளவு மெத்தனமாக, சோம்பேறியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது. நம்மிடம் இருக்கும் திறனையே நாம் அறியாது காலம கடத்தி வாழ்ந்து வந்துள்ளோம் . இந்த அறியாமை நம் வாழ்வில் ஏன் நிகழ்ந்துள்ளது தெரியுமா? இந்த ஐம்புலன்களுமே மனதுக்கு பின்னல் ஓடுவதால்தான் . இந்த ஐம்புலன்களைப்பற்றியுமே அந்த மனது தெரிந்து வைத்துள்ள அளவுக்கு - இந்த புலன்கள் தங்களைப்பற்றி அறிந்து வைத்திருக்கவில்லை. இந்த புலன்கள் தங்கள் நுகர் திறனை அறிய முயற்சிக்கவேண்டும்.

இந்த ஐம்புலன்களுக்கும் நாம் பயிற்சியளிக்க வேண்டும். அப்போது இந்த வாழ்வின் நுகர்வு தளம் வேறொரு உயர்ந்த பரிமாணத்துக்கு எடுத்து செல்லப்படும்.

Wednesday, February 9, 2011

அறியாமையை விட்டு நழுவதல்.

தியான நேரத்தில் நாம் நமது இரண்டு அறியாமைகளான 'நான்' எனும் மனம் மற்றும் 'எனது' எனும் உணர்வு இவை இரண்டிடமுமிருந்து நழுவுவது எப்படி என பார்ப்போம்.

இவை இரண்டுமே மாய சொரூபமானது.

இதிலிருந்து விடுபடும் வரை நமக்கு விமோசனம் கிடையாது.

அதற்கு சொந்த இருப்பு இல்லை. அது நிலையற்றது. அது உண்மை இல்லை. இக்கண விழிப்புணர்வின் ஒளிப்பிரதேசத்தில் நாம் இருக்கும்பொழுது 'நான்' எனும் வீட்டைவிட்டு, 'எனது' எனும் வாசல் கதவையும் தாண்டி அவைகளை விட்டு விலகி,- இப்போது மனத்தால் எதையாவது எண்ணுவதோ, உணர்வால் எதையாவது உணர்வதோ கூடாது. இரண்டையும் உதறிவிட்டு - வெளியில்வர

வெட்ட வெளியில் 'இருப்பு' இருப்பதை அந்த இருப்பே அறிந்துணரும்.

அந்த இருப்பில் தான் நாம் இருக்கிறோம். அங்கு எல்லைக்கு உட்பட்டது ஒன்றும் இல்லை. எல்லையற்ற இருப்பேயுள்ளது. இதுவே நாம் நமது இரண்டு அறியாமைகளை விட்டு நழுவும் உத்தி.

அகப்பயணம்.

நம்மில் மூன்றுவித தளம் செயல்படுவதாக பார்த்தோம். 1, மன-எண்ண தளம் 2, உடல்- உணர்வு தளம் 3, முற்றறிவு, முற்றுணர்வான- அநுபூதி தளம்.

நாம் மன எண்ண தளத்தில் நின்று இந்த மனம் என்பது என்ன? அது எதில் நிலைபெற்றிருக்கிறது? இந்த மனதின் ஆணிவேர் எங்கிருக்கிறது? என மனதால், எண்ணத்தால் ஆழ்ந்து சிந்திதோமானால், மனம் உணர்வின் மீதிருந்தே செயல்பட்டு வருவது தெரியும். மனதிற்கு ஆதாரம் உணர்வுதான். உணர்விலிருந்து எழுவதே எண்ணம், மனம்.

ஆக! மனதில் ஆழ்ந்து சஞ்சரித்தால் அது உங்களை உணர்விடம் சேர்த்து விடுகிறது.

இப்போது நீங்கள் உணர்வு தளத்தில் நின்று ஆழ்ந்து உணர துவங்கினால் முரணான உணர்வுகள் ஒருநிலைக்கு வந்து தேகம்முழுவதும் ஒருணர்வாக இக்கண உணர்வாக 'விழிப்புணர்வாக' நிலைக்கும். அப்போது, இந்த உணர்வு என்பது என்ன? அது எதில் நிலைபெற்றிருக்கிறது? இந்த உணர்வின் ஆணிவேர் எங்கிருக்கிறது? என்பதை உங்கள் உணர்வால்-விழிப்புணர்வால்- தேட துவங்கினால் அது உங்கள் மூன்றாவது தளமான அநுபூதி நிலையில் வேர் கொண்டிருப்பது தெரியவரும்.

உணர்வுக்கு ஆதாரம் அதிர்வுதான்.

உங்கள் விழிப்புணர்வு அழ்ந்து, அழ்ந்து நோக்க அது அதிர்வாக மாற்றமடைவது தெரியும். இந்த அதிர்வு உங்களிடம் மட்டுமல்ல ,

இந்த பிரபஞ்சமே இந்த அதிர்வுதான் என்பதையும் காண்பீர்கள்.

உங்கள் அதிர்வும், பிரபஞ்ச அதிர்வும் வேறுவேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான். அங்கு உணர்வு முற்றுணர்வாகவும் அறிவு முற்றறிவாகவும் துலங்கும்.

ஆக! ஆன்மீகம் என்பது அகப்பயணம். நீங்கள் உங்களுக்குள்ளே, உங்கள் மூலத்தை நோக்கி பயணித்து( inner self travel ) மூலத்தை கண்டறிவது.

இதில் உங்களுக்கு வெளியே உள்ள கடவுள், மதம், குரு இது எதுவும் உங்களுக்கு ஒரு பொருட்டல்ல! கடவுள், மதம், குரு இவை மூன்றும் உண்மை அல்ல அவைகள் யாவும் ஒரு மாயையே!.

Sunday, February 6, 2011

ஒலியதிர்வு

நாம் தியானத்தின்போது நமது விழிப்புணர்வை - அதாவது இக்கணம், இக்கணம் எனும் இக்கண உணர்வை - அடையும் விதம் பற்றி பார்ப்போம். முதலில் நமது உடலிலுள்ள அனைத்து செல்களையும் உறக்கத்திலிருந்து விழிப்புக்கு கொண்டுவருதல் வேண்டும்.

எப்படியெனில் நாம் செய்யும் ஆழ்ந்த நாடி சுத்திக்கு பிறகு 'ம்' எனும் மகா மந்திரத்தை நாம் உச்சரிக்க துவங்கி, ஏற்ற இறக்கம் இல்லாது ஒரே சீராக உச்சரித்து, அந்த சப்தத்தை ஒரு லயத்துக்கு கொண்டுவந்து, அந்த சப்தத்தை ஊன்றி கவனிக்க ( அறிவால் அல்ல உணர்வால் ) அந்த சப்தத்தின் கால இடைவெளி குறைந்து,இக்கணத்துக்கு வரும். சப்தம் வெறும் அதிர்வாக இக்கண அதிர்வாக அதிர்வதை உணர முடியும். அந்த 'இக்கண அதிர்விலிருந்து துவங்கி, உடல் முழுவதும் உள்ள அனைத்து செல்களுக்கும் பரவ விட, அனைத்து செல்களும் இப்போது விழித்துக்கொள்ளும்.அனைத்து செல்களும் அதிர்ந்து ஒரே லயத்துக்கு வர , இப்போது உங்கள் உணர்வு முழுவது ஒரே அதிர்வாக அதிர்வது தெரியும்.அந்த அதிர்வுகளும் அலை அலையாக, அதிர்வலையாக எழுவது தெரியும்.

இப்போது உங்கள் 'உணர்வு தளம்' மனதின் பிடியிலிருந்து விலகி ஒரு சுதந்திர நிலைக்கு வந்திருப்பது தெரியும்.

உணர்வு முழுதும் ஒரே அதிர்வாக இருப்பது உணர்வு சுதந்திரம்.

இந்த நிலையே விழிப்புணர்வு நிலையாகும்.

Saturday, February 5, 2011

ஒரு தேவ ரகசியம்

நம்மோடு பின்னி பிணைந்துள்ள நமது இரண்டு அறியாமைகளான நான் எனும் மனம், எனது எனும் உணர்வு இந்த இரண்டையும் நாம் விலக்கிவிட , நமது தியான நேரத்தில் முயலும்போது, அந்த ஆழ்ந்த தியானப் பொழுதில் - அந்த ஈடுபாடு நம்மில் உண்மையாக நிகழ நாம் அனுமதிக்கும்பொழுது - நமது விட்டகுறை, தொட்டகுறையாக, நமது நான் எனும் அறியாமை அவ்வளவு எளிதில் நம்மை விடுவதில்லை.

உங்களின் உண்மையான ஈடுபாட்டுக்கும், உங்களின் நான் எனும் அறியாமைக்கும் நிகழும் இந்த போராட்ட கணங்களில் உங்களில் ஒரு தேவ ரகசியம் 'ஸ்புரிக்கும்'.

அந்த மகா இயற்க்கை உங்களுக்கு அளிக்கும் வரப்பிரசாதம் இது.

இதை என்னவென இவன் சொல்ல உரிமை இல்லை. அதை அவரவர் தியானங்களிலேயே அறிந்து கொள்ளவேண்டியது.

Friday, February 4, 2011

விழிப்புணர்வு

இந்த வாழ்வின் அடிப்படை சீர்திருத்தத்திற்கு,மற்றும்ஆன்மிகம் பற்றி அறிய 'நான்யார்?' எனும் கேள்வி எப்படி அடிப்படையாக அமைகிறதோ அதுபோல, அநுபூதி நிலைக்குள் நுழைய இக்கணம் எனும் விழிப்புணர்வு அடிப்படையாக அமைகிறது.

நீங்கள் இக்கணத்தில் மட்டும் சஞ்சரிக்க முடிந்தால், உங்களுக்கு எந்த மன,எண்ண ஓட்டங்களும் இராது. மன,எண்ண ஓட்டங்கள் நிகழ,இக்கணம் எனும் கால இடைவெளி போதாது.

நம் வாழ்வின் 'அடிப்படைஅறிவு' நான் யார்? என்கிற கேள்வி. நம் வாழ்வின் 'அடிப்படைஉணர்வு' இக்கணம் எனும் விழிப்புணர்வு.

இந்த விழிப்புணர்வுதான் அனுபூதி நிலையின் சாவித்துவாரம். இதுவே அறிவின் ஒடுக்கம், உணர்வின் ஒடுக்கம். அனைத்தும் ஒடுங்கி, ஓரிடமாயிருத்தல்.

இதையே சித்தர்கள் "வெம்மாயை அற்று;வெளிக்குள் வெளி கடந்து சும்மாயிருக்கும் சுகம்" என்றனர்.
உங்கள் தியான நேரத்தில் இதை கவனப்படுத்தி இக்கணத்திலே மட்டும் இருத்தி லயித்து நின்றால் - உங்கள் அடிப்படை தன்மையான அநுபூதி தன்மை திறக்கும்.