Saturday, May 29, 2010

15 : ஆத்மா ஒரு விளக்கம்

நீங்கள் அறியும் இந்த உலகு, மாயா கோவ்ச்கியின் புல்லங்குழல்இசை, ஒரு அழகிய பூத்து குலுங்கும் மலர், கள்ளம் கபடு அற்ற,தன் போக்கில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு சிறுமி, மத்தியான கொளுத்தும் வெயிலில் ஒதுங்க கிடைக்கும் அடர்ந்த புங்க மரத்து நிழல், அதன் குளும் காற்று , மற்றும் இன்னும் சிறிது நேரத்தில் வெட்டி கொல்லப்பட போகிற அந்த திருவிழா ஆட்டுக்குட்டி, சற்று நேரத்திற்கு முன், விபத்தில் காயமடைந்து அழுது கொண்டிருக்கும் இந்த சிறுவன், இன்னும் எவ்வளவோ, நீங்கள் அறிவது, நீங்கள் உணர்வது (உங்களால் வாழப்படுகிற உங்கள் வாழ்வு) அனைத்தையும் அறியப்படுவது, உணரப்படுவது உங்கள் உள்ளே உள்ள 'உணர்வு தளத்தி'லேதான். இந்த உலகு, இந்த பிரபஞ்சம் எல்லாமே உங்களை பொறுத்த வரையில் , உங்கள் உள்ளேதான் நிகழ்கிறது.
அந்த தளம் தான் , உங்கள் வாழ்வு நிகழும் தளம். உங்கள் வாழ்வின் அனைத்து அர்த்தமும் இதில் மட்டுமே உள்ளது. இந்த உணர்வு தளத்தை நாம் கூர்ந்து கவனித்து அதன் கட்டமைப்பு, அதன் இயக்கம், அதன் தன்மையை அறிவது அவசியம். அது நிறைவு பெறாத நிலையில், (நிறைவை நோக்கிய -குறையின் தவிப்பு) இந்த தவிப்பு உள்ளவரை இவை அனைத்தும் நமக்கு துலக்கமாகிக்கொண்டேயிருக்கும்.
'போதும்' எனும் ஒரு உணர்வால் இந்த தளத்தை நிறைவு செய்ய முடியும். இந்த உணர்வுதளம் நிறைவு நிலையில் நின்றால், உணர்வு தளம் பூரணத்துவம் பெறும்.
அந்த பூரண தன்மையை நோக்கியே , நமது வாழ்வு அந்த ஒருசெல் உயிரியிலிருந்து புறப்பட்டு இன்று வரை, பல்லாயிர பிறவிகள் தொடர்ந்து 'தவித்து'க்கொண்டிருக்கிறது.இதைத்தான் முன்னோர்கள் 'ஆத்மா' என சொல்லியிருக்கிறார்கள்.

Tuesday, May 11, 2010

14 : மூலமும் வியக்தியும்.


மனித உயிரின் தொழில் நுட்பம் மிக நேர்த்தியாக இருக்கிறது. நாம் இரட்டையாக இருக்கிறோம். நமக்குள் ஒருவன் இருப்பதை நாம் அறிவோம். நாம் செய்கிற காரியத்தை நாமே உள்ளிருந்து கவனித்துக்கொண்டும் இருப்போம் தெரியுமா? செயல்படுபவன் ஒருவன், கவனிப்பவன் ஒருவன். கவனிப்பவன் வெறும் சாட்சிதன்மையுடன் இருக்கிறான். சாட்சி தன்மையாக இருப்பவன் நமது மூலம். காரியமாற்றுபவன் நமதுவியக்தி.
இந்த பிரபஞ்சத்திலும் இந்த இரட்டை தன்மை உண்டு. மூலம் ஒன்று; வியக்தி ஒன்று. தூய இருப்பே அந்த மூலம். நம் காட்சிக்கு புலனாகும் இந்த பிரபஞ்ச தோற்றமே வியக்தி.