இப்பிரபஞ்சத்திலுள்ள அனைத்து பொருட்களுமே சமநிலையுறவே தவிக்கிறது. அதுவே இப்பிரபஞ்ச பொதுவியல்பாகவும் இருக்கிறது.இச்சமனிலையை அடைவதே ஒவ்வொரு பொருளின் முடிவானநோக்கு. ஏனெனில் அது அங்கிருந்தே துவங்கியுள்ளது இந்த பயணத்தை. அதுவே அதன் மூல இருப்பு. சமநிலையான அவ்வியல்பை நோக்கி 'கலை'வதே அப்பொருளின் மூல நிலைக்கு ஆனந்தமாகவும், இயல்பாகவும், இன்பமாகவும் உள்ளது.
இப்பிரபஞ்சமே ஆனந்தமாகவும், இயல்பாகவும், இன்பமாகவுமே இருக்கிறது. பொருள் நிலை என்பது எல்லைக்குட்பட்ட 'தனி'த்தன்மை வாய்ந்தது. சமநிலை என்பது எல்லையில்லா தன்மையது. ஒவ்வொரு பொருளுக்கும் தன் மூல இருப்பை நோக்கி கலைந்து நகர்தலே ஆனந்தமானது.
இக்காரணத்தினாலேயே நாம் உருவாக்கி வைத்த பழங்கால கட்டிடங்கள், பழங்கால கோவில்கள் எல்லாம் சிதைந்து வருகிறது. ( இதுவே பொருட்கள் தன் மூல இருப்பு நிலையை நோக்கி கலைந்து நகர்தல் என்பது ) பொருள் என்கிற நிலை கலைந்து தன் மூல நிலைக்கு திரும்புதல் எனலாம். ஆக ஒரு பொருள் தன் மூல நிலை நோக்கி திரும்புதல் இன்பமானது, ஆனந்தமானது.
நமது உடல்களிலுள்ள பல கோடி உயிரிகளுமே ஒவ்வொரு தனித்தனி பொருட்கள் தான். உயிர் அற்ற பொருளுக்கும், உயிர் உள்ள பொருளுக்கும் உள்ள வேறுபாடு என்னவெனில் உயிர் அற்ற பொருள், இயற்பியல், வேதியியல் விளைவுகளின் விதிப்படி அவை நடந்து கொள்கின்றன. தமக்கென்று எந்த இச்சையும் இல்லாது கிடக்கின்றன. எந்த தடையுமின்றி தன் மூலநிலையை நோக்கி ( தனது மூல இருப்பை நோக்கி ) இயல்பாகவே கலைந்து நகர்ந்து விடும்.
ஆனால் ஒரு உயிருள்ள பொருள் அப்படி தன் மூல நிலையை நோக்கி, திரும்ப நகர்ந்து விடுவதில்லை. அப்படி அப்பொருள் தனது மூல நிலையை நோக்கி நகர்தலை தடுத்து நிறுத்தும் செயலுக்கே உயிர் எனப் 'பொருள்'படும் . ஒரு பொருள் தன் மூல நிலையை நோக்கி நகர்வதே தீவிர முடிவாக இருக்கும், அதுவே அதன் இயல்பும் கூட.
நமது உடலிலுள்ள பலகோடி உயிர் பொருட்களும் இதற்கு விதி விலக்கல்ல! - அப்படி தன் மூல நிலைக்கு அப்பொருள் நகர்வதை தடுக்கும் உயிர் அப்பொருளை மேலும் ஓர் உயர்நிலை பரிமாணத்திற்கு இட்டு செல்கிறது. அந்த பொருளில் உயிர் என செயல்படுவதே அறிவுதான்.நாம் உயிர் என்று சொல்வது அறிவைத்தான்.அந்த அறிவு பல காலம் பரிணாமமடைந்து இப்போது மனித உயிரியாக பரிமாணப்பட்டிருக்கிறது.- அறிவு தன்னை அறியும் தேற்றமே பரிணாம முதிர்வு.
அந்த அறிவின் உச்சநிலையே இதுதான். இனி இந்த மனித உயிரிகளுக்கு( செல்களுக்கு ) சுதந்திரம் வழங்க வேண்டும். இந்த உயிரான 'அறிவு' தன் பொருளின் தன்மையான தன் மூல நிலையை நோக்கி, தன்மூல இருப்பை நோக்கி, நகர்தலை துவங்க வேண்டும். அல்லது பொருளின் இயல்புக்கு( அனுமதிக்க வேண்டும் ) ஆக அந்த மூல இருப்புக்குள் பிரவேசிக்க வேண்டும். இதுவே உயிரின் முடிவான நோக்கு.இதுவே ஜடப் பொருளுக்குள் அறிவு புகுந்ததின் நோக்கம்.
No comments:
Post a Comment