நம் செயல்களுக்கு காரணம் வினைப்பயனும் இப்போது செய்யும் முயற்சியுமே. இவ்விரண்டைத்தவிர எந்த காரியத்திற்கும் அனுகூலமாகவோ, பிரதியனுகூலமாகவோ இருப்பதற்கு வேறொரு காரணமுமில்லை. நடக்க வேண்டிய காரியங்கள் இவ்விரண்டின் பலத்தை தழுவியே நடந்து தீரவேண்டும். எதற்கு தீவிரம் அதிகமோ அது ஜெயமடைகிறது. ஆனால் வினைப்பயன்
நம் நோக்கத்திற்கு எட்டாதது. அதை நாம் எவ்விதமும் மாற்ற முடியாது. வினைப்பயன் அளவில்பட்டது, வளராது. முயற்சியோ நம்முடைய வசம். இம்முயற்சியை யுக்தி புத்தி, விடாமுயற்சிகளோடு செய்து வந்தால் , வினைப்பயனை நசிப்பித்துக் காரியங்களில் ஜெயம் அடையலாம் . பெரும்பாலும் ஜனங்கள் தங்களுக்கு விளைவதெல்லாம் தெய்வசெயலாக கருதி செய்ய வேண்டியவைகளை , செய்யாமல் மதி கெட்டு இருக்கிறார்கள். அதாவது வினைப்பயன்களே தெய்வசெயலாக கூறப்படுகின்றன. ஆனால் இவ்வினைப்பயன்களோ, நம்முடைய பூர்வ பிரயத்தனங்கள். ஆகையால் நமது தேகம் ஒரு பூர்வ -பிரத்யட்ஷ வினைகளின் போர்க்களமாயிருந்து அப்போரின் முடிவே நமது வாழ்வாக ஏற்ப்படுகின்றது.
தெய்வம் - அதன் சொரூபம்.
நமக்கு வேண்டியவைகளை தேடிக்கொள்ள நம் பிரயத்தனத்தால் முடியுமேதவிர வேறோன்றினாலும் முடியாது. தீவிர முயற்சியே தெய்வம். இதையே ஒவ்வொருவரும் ஆசிரயிக்க வேண்டும். நமது முயற்சியில்லாமல் ஒரு காரியமும் சித்தி பெறாது. நம் புத்திக்கு புலப்படாமல் தெய்வம் எங்கிருந்தோ நம் செயல்களுக்கு பலனை அளிப்பதாக எண்ணுவது மூடத்தனம். இதைவிட அக்ஞானம் வேறில்லை. நம்மால் செய்யப்படும் காரியங்களெல்லாம் நம் இந்திரியங்களால் செய்யப்பட வேண்டும். இந்திரியங்கள் மனத்தால் ஏவப்படுகின்றன. மனது புத்தியின் அசைவு. நாம் அனுபவிப்பதெல்லாம் கிரியைகளின் பலனே. ஆகையால் புத்தியின் அசைவுதான் பலன் ரூபமாக அனுபவிக்கப்படுகின்றது. நியதி இப்படி இருக்க , தேயவத்தால் நடைபெற வேண்டியது என்ன? மனித பிரயத்தனங்கள் இல்லாமல், எப்பொழுது அவர்கள் (மனிதர்கள் ) காரியங்கள் யாதும் முடிவதில்லையோ , அப்பொழுது தெய்வாதீனம் என்னும் கொள்கையால் என்ன பயன்? குறிப்பு:- யோக வாசிஷ்டம் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment