Wednesday, February 9, 2011

அகப்பயணம்.

நம்மில் மூன்றுவித தளம் செயல்படுவதாக பார்த்தோம். 1, மன-எண்ண தளம் 2, உடல்- உணர்வு தளம் 3, முற்றறிவு, முற்றுணர்வான- அநுபூதி தளம்.

நாம் மன எண்ண தளத்தில் நின்று இந்த மனம் என்பது என்ன? அது எதில் நிலைபெற்றிருக்கிறது? இந்த மனதின் ஆணிவேர் எங்கிருக்கிறது? என மனதால், எண்ணத்தால் ஆழ்ந்து சிந்திதோமானால், மனம் உணர்வின் மீதிருந்தே செயல்பட்டு வருவது தெரியும். மனதிற்கு ஆதாரம் உணர்வுதான். உணர்விலிருந்து எழுவதே எண்ணம், மனம்.

ஆக! மனதில் ஆழ்ந்து சஞ்சரித்தால் அது உங்களை உணர்விடம் சேர்த்து விடுகிறது.

இப்போது நீங்கள் உணர்வு தளத்தில் நின்று ஆழ்ந்து உணர துவங்கினால் முரணான உணர்வுகள் ஒருநிலைக்கு வந்து தேகம்முழுவதும் ஒருணர்வாக இக்கண உணர்வாக 'விழிப்புணர்வாக' நிலைக்கும். அப்போது, இந்த உணர்வு என்பது என்ன? அது எதில் நிலைபெற்றிருக்கிறது? இந்த உணர்வின் ஆணிவேர் எங்கிருக்கிறது? என்பதை உங்கள் உணர்வால்-விழிப்புணர்வால்- தேட துவங்கினால் அது உங்கள் மூன்றாவது தளமான அநுபூதி நிலையில் வேர் கொண்டிருப்பது தெரியவரும்.

உணர்வுக்கு ஆதாரம் அதிர்வுதான்.

உங்கள் விழிப்புணர்வு அழ்ந்து, அழ்ந்து நோக்க அது அதிர்வாக மாற்றமடைவது தெரியும். இந்த அதிர்வு உங்களிடம் மட்டுமல்ல ,

இந்த பிரபஞ்சமே இந்த அதிர்வுதான் என்பதையும் காண்பீர்கள்.

உங்கள் அதிர்வும், பிரபஞ்ச அதிர்வும் வேறுவேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான். அங்கு உணர்வு முற்றுணர்வாகவும் அறிவு முற்றறிவாகவும் துலங்கும்.

ஆக! ஆன்மீகம் என்பது அகப்பயணம். நீங்கள் உங்களுக்குள்ளே, உங்கள் மூலத்தை நோக்கி பயணித்து( inner self travel ) மூலத்தை கண்டறிவது.

இதில் உங்களுக்கு வெளியே உள்ள கடவுள், மதம், குரு இது எதுவும் உங்களுக்கு ஒரு பொருட்டல்ல! கடவுள், மதம், குரு இவை மூன்றும் உண்மை அல்ல அவைகள் யாவும் ஒரு மாயையே!.

No comments:

Post a Comment