Tuesday, March 22, 2011

‘நான்’ உருவான கதை.

நம்மிடம் இரண்டு 'நான்'கள் இருகின்றன. நமக்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அறியாமையான 'நான்' எனும் கருதுகோள். இன்னொன்று கர்த்தா. இந்த நான்-இல்லாத ஒன்றை இருப்பதாக புனையும் கருத்து. அது நமது எண்ணங்களால் உருவாக்கப்பட்டது. அந்த எண்ணங்களுக்கு ஆதாரம் நினைவகத்தில் உள்ள படிம நினைவுகள். நினைவு ( memory ) என்பது இறந்த காலத்தினுடையது. இந்த நினைவு தொகுப்பே நான். இதே தொகுப்பை வேறொரு படிமுறையில் உங்களால் தொகுக்க முடிந்தால், நீங்கள் வேறொரு நானாக உங்களை கருதுவீர்கள்.

இந்த நானின் மையம் உங்கள் பாதுகாப்பை முன்னிருத்தியதாக இருப்பதை கவனியுங்கள்.

உங்களை சுற்றி உள்ளவைகளோடு நீங்கள் போராடி உங்களை காத்துக்கொள்ள வேண்டியிருந்ததால் உருவான பாதுகாப்பு மையம் அது. முதன் முதலில் உங்களுக்கு எப்போது ஆபத்து வந்ததை அறிந்தீர்களோ அப்போது விழுந்த விதை அது. - தவிரவும் இந்த தன்மை பரம்பரை பரம்பரையாக கை மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது - இந்த நான் இந்த உடலை மட்டும் நான் என கருதுவதையும் கவனியுங்கள். இந்த நான் எனும் பாதுகாப்பு தன்மை தனக்கென ஒரு சட்ட திட்ட வளையத்தை உருவாக்கி வைத்துக்கொண்டுள்ளது. அந்த வளையம் தான் நான். இந்த நானுக்கு இது தான் எல்லை.


இந்த பூமியில் நாம் காணும் அனைத்து தாவர வகை உயிரினங்கள், நுண்ணுயிரினங்கள், நகர்வன, பறப்பன, நீந்துவன, நடப்பன மற்றும் விலங்குகள், மனிதர்கள் என உயிருள்ள அனைத்துக்குமே நான் என்ற தன்மை இருக்கிறது. உயிருள்ளதற்கெல்லாம் இந்த நான் தன்மை இருக்கிறது.

உயிருக்கும் ஜடத்திற்கும் உள்ள வித்தியாசமே இந்த நான் தன்மை தான்.

சரி இந்த நான் எப்படி செயல்படுகிறது என காண்போம். நீங்கள் காலையில் விழித்தெழுந்து வாசலில் நின்று பல் துலக்கிக்கொண்டிருந்தீர்கள். உங்களுக்கு நாலாயிரம் ரூபாய் தரவேண்டிய முத்துசாமி சாலை வழியே போகும்பொழுது உங்கள் பார்த்து விட்டு 'காணாததைப்போல்' போகிறான். விட்டு விடுவீர்களா?
உங்கள் மனம்- இந்த நான்- உடனே செயல்பட தொடங்குகிறது. “பார்த்து விட்டு 'காணாததைப்போல்' போகிறான். இவன் நமக்கு பணம் கொடுப்பானென்று என்ன நிச்சயம்? அவனை உடனே துரத்தி பிடித்து பணத்தைககேள்” என உங்களுக்கு உங்கள் மனம் கட்டளை இடுகிறது.

அந்த எண்ணம் உங்களுக்கு எப்படி தோன்றியது?

நீங்கள் காலையில் உங்கள்பாட்டுக்கு வாசலில் நின்று பல் துலக்கிக்கொண்டிருந்தீர்கள்.உங்களுக்கு நாலாயிரம் ரூபாய் தரவேண்டிய முத்துசாமி சாலை வழியே போகும்பொழுது உங்கள் பார்த்து விட்டு 'காணாததைப்போல்' போகிறான்.அவனைப்பார்த்ததும் உங்கள் மூளையில் அவனைப்பற்றிய நினைவுத்தொகுப்பு திறக்கப்பட்டு அவனைப்பற்றி அனைத்து தகவல்களும் உங்களுக்கு தொகுத்து தரப்பட்டு "பார்த்து விட்டு 'காணாததைப்போல்' போகிறான். இவன் நமக்கு பணம் கொடுப்பானென்று என்ன நிச்சயம்? " என உங்களை உசுப்பியும் விடுகிறது.

இந்த தகவல் உங்கள் பெரு மூளையிலிருந்து நியூரான் செல்களில் பதிந்து ( நியூரான் செல் தொடர் வழியாக ) ஒரு மின்னோட்டம் மூலம் உணர்வுககுப் போய் உணர்வின் வழியாக உடல் உறுப்புகளுக்கு போய், பின் அது செயலாக மாறி - எப்படியோ துரத்திப்பிடித்து முத்துசாமியை "இன்னும் ஒரு வாரத்தில் பணத்தை கொடுத்து விடுகிறேன்" என சொல்ல வைத்து விட்டீர்கள்.

1, எண்ணம் தோற்ற நிலைப்பாடு : எண்ணம் > பாதுகாப்பு > சுயம் > நினைவகம் > பெரு மூளை.
உங்களில் எண்ணம் தோன்றுவதற்கு உங்கள் பாதுகாப்புணர்வு காரணமாக இருக்கிறது.
உங்கள் பாதுகாப்பு தன்மைக்கு உங்கள் சுயம் காரணமாக இருக்கிறது.
உங்கள் சுயம் உருவாவதற்கு நினைவக தொகுப்பே ( கருத்துரு) காரணம்.
உங்கள் நினைவகம் பெரு மூளையில் இருக்கிறது.

2,எண்ணம் செயல் நிலைப்பாடு : எண்ணம் > உணர்வில் மாற்றம் > உடல் செயல்.
எண்ணத்தினால் உணர்வில் மாற்றம்.
உணர்வினால் உடலில் மாற்றம்.
உடல் மாற்றமே செயலாக பரிணமிக்கிறது.

இந்த நான் தன்னை கர்த்தா என எண்ணிக்கொள்கிறது. இந்த நான் எனும் கருதுகோள் கர்த்தாவாக முடியுமா?

உங்கள் கடந்த கால நிறைவேறாத ஆசைகளே நான் எனும் கருத்துருவாக உருவாகி உள்ளது. ஏற்கனவே முடிந்துபோன காலாவதியான தகவல்களை திரட்டி அதற்கொரு வடிவம் கொடுத்தால் அதுதான் நீங்கள். ஏற்கனவே நிறைவேறாத ஆசைகள் மீண்டும் நிகழ்ந்து அவைகள் முற்றுப்பெறுமா?

இறந்த காலத்தை நிகழ்காலத்தில் நிகழ வைக்க துடிக்கும் உங்கள் அறியாமையை என்ன சொல்ல!.

உங்களோட இந்த ‘நான்’ வெறும் எண்ணம் மட்டுமே!

உணமையான கர்த்தாவோ இவை எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருக்கிறது.

எல்லாம் தெளிவாகிவிட்டது.


சரி , உங்களின் ‘நான்’ அறியாமை எங்கு தொடங்கியது என தெரியுமா?


எல்லாம் பாதுகாப்பாக இருக்கிறது. நாமும் எந்த ஆபத்தும் இல்லாது இருக்கிறோம். ‘சரி இப்போ நாம் என்ன செய்யலாம்?’ என உங்கள் சுயம் நினைத்த போது, “எனக்காக நீ இனி செயல்படலாம்” என உங்களது நிறைவேறாத ஆசைகளின் தொகுப்புகள் சூழ்ந்து கொண்டு உங்கள் சுயத்தை செயல்பட வைத்தது.

இதுதான் உங்களின் ‘நான்’ உருவான கதை. இல்லாத ஒன்றை இருப்பதாக புனைந்த கருத்து இதுதான்.

2 comments: