Saturday, March 20, 2010

9 : ஆனந்த அலை.


இந்த பிரபஞ்ச சாகரத்தில் நீ ஒரு துளி, நான் ஒரு துளி, அவன் ஒரு துளி.
இந்த சாகரத்தில் உள்ள துளிகள் அனைத்தும்
தனித்தன்மை வாய்ந்தது,அதனதன் உள் அமைப்பில்.
துளிகளால் ஆனதுவே சமுத்திரம்.
இந்த துளியின் உள் அமைப்பும் மாறிக்கொண்டேதான் இருக்கிறது,
(இந்த உள் அமைப்பை நிர்ணயிப்பதும் அந்த சாகரமே)
துளிக்கு ஒரு தனி நிலை தொடர்வதில்லை.
இந்த துளிக்கு என ஒரு தனி வாழ்வு உண்டா?
அதன் எதிர் நீச்சல்தான் என்னே? அது எதை சாதிப்பதற்காக இந்த எதிர் நீச்சல்?
அதற்கு பாவம் ஓய்வுகூட கிடையாது.
அந்த துளி எந்த உண்மையை நிலைநிறுத்த இந்த எதிர் நீச்சல் போடுகிறது?
அந்த துளியே இந்த சமுத்திரத்தின் ஒரு பகுதிதான்
.இதை அறிந்துகொள்ளக்கூட அதற்கு நேரம் இல்லை.
அப்படி ஒரு போராட்டம்.
சமுத்திரம் தான் துளியின் கதியை என்றும் நிர்ணயிக்கும்,
துளியால், 'துளிக்கூட' சமுத்திரத்தின் கதியை நிர்ணயிக்க முடியாது.
துளி போராட்டத்தை விடுத்து தன்னை அறிந்து- தன்னை மறந்து
சமுத்திரத்தோடு இயைவதுவே அதற்கு விதிக்கப்பட்டது.
அப்படி இயைந்தால் துளிக்குள்ளும் அலை நிகழும்
அது ஆனந்த அலை.

No comments:

Post a Comment