Thursday, September 30, 2010

நமது சாராம்சம்.

நமது வாழ்வின் ஒட்டுமொத்த சாராம்சமும் நாம் எவ்வளவு அறிந்திருக்கிறோம், நாம் எவ்வளவு உணர்ந்திருக்கிறோம் என்பது மட்டுமே! ( அது எதற்காக உதவுகிறது ? )

அறிவது , உணர்வது இந்த இரண்டுக்கு மேல் எந்தவித சாந்நித்தியமும் கிடையாது இந்த வாழ்க்கையில். உங்களுக்கு இயற்பியல் தெரியலாம், வேதியல் தெரியலாம், கணக்கியல் தெரியலாம், சமூகவியல் தெரியலாம், மரபியல் தெரியலாம், மானிடவியல் தெரியலாம் இவையாவும் நமது அறிவால் அறிவது.

அதேபோல உணர்வு விஷயத்திலும் நீங்கள் எந்தெந்த விதமான, பலவித உணர்வுகளை எல்லாம் உணர்ந்திருக்கலாம். எல்லா இயல் அறிவுகளுமே உங்களுடைய வாழ்க்கைக்காக நீங்கள் தேடி அறிந்தது.

தியானத்தில் சுத்தமான தன்னறிவில் முழு மனத்தையும் அசைவின்றி நிலை நிற்க வைத்தால், உங்களின் பலவித அறிவு ஏகமாகி முற்றறிவாக திகழும். இனி உங்களுக்கு தெரியாதது எதுவுமில்லைஇந்த உலகில். இனி, நீங்கள் புதிதாக அறிய எதுவுமில்லை.

அதேபோலத்தான் உணர்வு விஷயமும். தியானத்தில் அமர்ந்து உங்களின் உணர்வனைத்தையும் திரட்டி மேல்நோக்கி புருவ மத்தியை நோக்கி செலுத்தி அங்கேயே அசைவற்று நின்றால் , உங்களின் பல்வேறுவித முரணான உணர்வுகள் ஒன்றுகூடி ஒரே ஏகவுணர்வாக திகழும். அவ்வுணர்வு முற்றுணர்வாகும். அதுவே பரிபூரண நிலை. அங்கிங்கெனாதபடி எங்கும் ஒருணர்வான கைவல்யம் அதுவே!

இப்போது உங்களுக்கு எந்த பேதமுமில்லை. நீங்கள் வேறு பிரபஞ்சம் வேறில்லை.ஆதிசங்கரர் சொன்ன 'அத்வைத நிலை' இதுவே!

இதுவரை நம்மில் இந்த மின் சக்தி அறிவாகவும், காந்த சக்தி உணர்வாகவும் பிரிந்து செயல்பட்டு வந்ததை அறிவீர்கள். தியானத்தில் உங்களுக்கு கைவல்ய நிலை சித்திக்கும்போது எலக்ட்ரிக் வெல்டிங் செய்யும்போது கவனித்து பாருங்கள் எலக்ட்ரிக் 'லாடை' பற்றவைக்கும் இரும்பின் மீது வைக்கும்பொழுது 'பட்டென' ஒரு சப்தம் வந்து அந்த லாடும், பற்றவைக்கும் இரும்பும் ஒட்டிக்கொள்ளும்.

அதேபோல நம் தியானத்தின் போதும் புருவ மத்தியில் நமது மின் சக்தியும்,காந்த சக்தியும்(அறிவும், உணர்வும்)இதுவரை தனி, தனியாக இருந்துவந்தது இப்போது ஒன்றாக கலந்து 'பட்டென' தெறித்து விழும். இனி உங்கள் உணர்வும் அறிவும் பிரிந்து செயல்படாது, ஒன்றாகி செயல் படும்.

ஒரு மகானின் திருஷ்டிக்கும், நம்மைப்போன்ற சாதாரண மனிதரின் திருஷ்டிக்கும் உள்ள வேறுபாடு இதுதான். நமக்கு உலகமாக விரிந்து காணப்படும் இந்த 'பொருளான' உலகு , மகான்களுக்கு இந்த உலகின் அடிப்படை வஸ்துவான மின்காந்த தளமாகவே அறியப்படும்.

1 comment:

  1. Manamarnthaa Nanrri. Your writings are very valuable.

    Thanks Again
    Ravi

    ReplyDelete