நமது உணர்வை நாம் ஒரு அசைவற்ற நிலையிலிருந்து அகண்டு விரித்து உணர முடியும். அசைவற்ற நிலைதான் நமது அடிப்படை நிலை. ( இருக்கிறது என்கிற அளவேயான உணர்வு நிலை ) அடுத்து இருக்கிறோம் எனும் விகல்ப நிலை. ( உணர்வும், உணர்வோனும் எனும் விகல்ப நிலை ) இது எப்படி சாத்தியப்படுகிறது எனில் - நமக்கு நேரிடை உணர்வு மட்டுமன்றி , நினைவு சக்தியும் இருக்கிறது. அந்த ஞாபக சக்தி மூலம் ஏற்கனவே நமக்கு கிடைத்த உணர்வை ஞாபகப்படுத்தி மீண்டும் உணர்ந்து பார்க்க முடிகிறது.
இது ஒரு பொய் தோற்றம்.
இதை நமது மனமே செய்வதால், -இந்த உணர்வு உண்மையா? பொய்யா? என்பதையும் தீர்மானிக்கும் சக்தியாக அந்த மனமே இருப்பதால் ,- இந்த ( பொய் ) உணர்வும் நமக்கு மெய்யெனவே தோன்றுகிறது.
அடுத்து நான் இருக்கிறேன் எனும் மன உணர்வு ( இப்போது நேரிடை உணர்விலிருந்து சற்றே விலகி -மனமே முழு ஆளுமையையும் எடுத்துக்கொள்கிற நிலை ) அடுத்து நான் இருக்கிறேன், இந்த உலகு இருக்கிறது எனும் , தன்னிலை, முன்னிலை, படர்க்கை என விரிகிறது இந்த உணர்வு நிலை.
இந்த படர்க்கை நிலையில் உணர்வை அனுசரிப்பவர்களால் தனக்கு வெளியே ஏதாவது தனக்கு ஒவ்வாத நிகழ்வு நடக்கும்போது, அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் உடனே எரிச்சலடைகின்றனர். இதையே கனவு, கற்பனை என இன்னும் விரிவாக அனுபவிக்கும் மகானுபவர்களும் உண்டு.
ஆனால் நமது அடிப்படை உணர்வான ( அனைத்தின் அடிப்படையான உணர்வுமான ) 'இருக்கிறது' என்கிற உணர்வே எப்போதும் இருந்தது, இப்போதும் இருக்கிறது, எப்போதும் இருக்கும். அது அசைவற்ற நிலை. அது முழு நிறைவானது. அனைத்தையும் உள்ளடக்கியது. பரிபூரணமானது. அதற்கு உள்ளும், அப்பாலும் எதுவுமில்லை. இருக்கிறது என்பதைத்தவிர வேறெதுவுமில்லை. இந்த உணர்வு எல்லா மனிதருக்கும் உள்ளதே! இதை அறிந்துணர்வதே ஆன்மிகம் என்பது.
இதில் எந்த மதமோ, எந்த கடவுளோ, எந்த புனிதமோ, எந்த அவதாரமோ, எந்த ரட்சகமோ இல்லை, இல்லை, இல்லை. ( இவையெல்லாம் ஒரு வித்தியாசமான பொய். அவ்வளவே ) எனவே மனித குலத்தோரே அறிவால் அறிந்து எல்லா பொய்களையும் கடந்து உண்மையை அறிந்து வாழ்வீராக!.
No comments:
Post a Comment