இந்த மனிதகுல சமூகத்திற்கு ஒரு தகவலை இப்போது கொடுக்க வேண்டியது அவசியம் ஆகிறது.
இந்த உணர்வு உடல், பிராண உடல் மன உடல் தொடர்ந்து பூரண உடல் மற்றும் இணைப்பு உடல் இறுதி நிலையான திவ்ய உடல் என இறுதி நிலை வரை பயணித்த , அந்த நிலைகளை உணர்ந்தவர்கள் அதை சில கணங்கள் உணர்ந்ததாலேயே அதை அடைந்துவிட முடியாது.
தொடர்ந்து நித்தம் தியானத்தின் வழியாக அதை உணர்ந்து வருதல் என்பது ஆரம்ப நிலை.
க்ஷணம் தவறாது இதில் நிலைத்தவர்கள் மகான்கள் எனப்படுபவர்கள்.
தொடர்ந்து பயிற்சியிலிருப்பவர்கள் எந்த அளவுக்கு மாற்றம் ஏற்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிவதற்கு ஒரு உபாயம் உண்டு.
அந்த திவ்ய தேகத்தை உணர்ந்தவர்கள் நீண்ட நாட்கள் இந்த ஸ்தூல ஆதார வாழ்வை வாழ விரும்ப மாட்டார்கள். எவ்வளவு விரைவாக இந்த ஸ்தூல வாழ்வை உதறி விட வேண்டுமோ அவ்வளவு விரைவாக உதறி விடுவர்.
ஒரு உதாரணம் இதற்கு பொருந்தும் என பார்க்கலாம். அதாவது நூறு சதவிகிதம் அந்த இறுதி நிலையை அடைந்து விட்டவர்கள் சதாசிவ பிரம்மேந்திரர், அக்கம்மாதேவி, சமண மதத்தை சேர்ந்த திகம்பரர்கள்.
இவர்கள் யாவரும் தமது ஸ்தூல தேக உணர்வேயில்லாது மழலை போல திரிந்தவர்கள். இந்த ஸ்தூல தோற்ற உலகத்தைப்பற்றியும் அக்கறை கொள்ளாதவர்கள்.
இன்னும் சிலரை பார்த்தால் அந்த சதவிகிதம் குறையும். அந்த இறுதி நிலையான திவ்ய தேகத்தில் முற்றும் பொருந்தாது குறைவுற்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த குறைவு எதனால் ஏற்படுகிறது என கவனித்தால், இந்த உயிரணு தோன்றி பல்லாயிர பிறவி கண்டு பலகோடி அனுபவம் கண்டு வளர்ந்து வந்துள்ளது. பொருளுலகு சார்ந்த இந்த 'நான்'. இது பெருங்காய டப்பா மாதிரி உள்ளே காலியாக்க முடிந்தாலும் வாசம் போக்க முடியாதவர்கள் இவர்கள். இந்த ஸ்தூல தன்மைக்கும் சூட்சும தன்மைக்கும் இடையான தடுமாற்றம். இது,அவர்களது போதனைகளில் தெரியும். இது தூய உண்மையை அறிவு நிலைகளில் தெளிந்தவருக்கு மட்டுமே சாத்தியப்படுகிறது.
அவர்கள் எத்தனை சதவிகிதம் இந்த பௌதிக உலகில் கவனம் வைத்திருக்கிறார்களோ அத்தனை சதவிகிதம் அவர்களிடம் வேறு ஒரு நோக்கம் இருக்கிறது என கண்டுபிடித்துக்கொள்ளுங்கள். திரு ராமகிருஷ்ணர் யாராவது அன்பர்கள் காசைக்கொடுத்தால் அதை வீசி எறிவாராம். இதற்கு அவர் அப்பொழுது வறுமை நிலையில் இருந்த நேரம்.
இது ஒரு புறமிருக்க
ஒரு துளிக்கு கடல் என்றால் என்னவென தெரியாத அறியாமையின் போது, "தனக்கு ஒரு 'தனி' தன்மையுள்ளது. மற்ற எந்த துளியை விடவும் நான் வித்தியாசமானவன், உருவத்திலும், நிறத்திலும், உள் அமைப்பிலும், குணத்திலும்,அறிவிலும் அனைத்திலுமே மற்றவரிடமிருந்து நான் வேறுபட்டவன். நான் நிகரற்றவன்" என தன்னைப்பற்றி கருத்து கொண்டுள்ளது. எப்போதாவது குளம், குட்டை, ஓடை என காணும்பொழுது சற்று மிரட்சி அடைந்தாலும், பழக்க தோஷத்தால் இந்த தன் பிரபாவம் குறைவதில்லை. என்றாவது ஒரு நாள் ஆர்ப்பரிக்கும் கடலை காண நேரும்பொழுது மட்டுமே இந்த துளி தன்னை அறிந்து தன் மூல நிலை அறிந்து தன் தகவமைப்பை அறிந்து நான் தனியல்ல! என்னை சூழ கடல் இருக்கிறது. என்னைக்கடலில் விட்டு விட்டால், நான் எனும் துளி காணாது போய் இந்த துளியும் கடலாகிவிடும் எனும் ஏக உணர்வு தோன்றி தன்னை கடலில் சேர்த்து கடலோடு இணைந்து விடுதலே அந்த துளியின் ஆன்மீக வரலாறு.
இனி அந்த துளி பேசுமா? சதாசிவ பிரம்மேந்திரா, சமண திகம்பரர்கள் துளியாக இருந்து கடலாக மாறியவர்கள். என்று மாறினார்களோ அன்றே துளியின் கதை முடிந்து விட்டது.
துரதிர்ஷ்டமாக நமக்கு நிறையவே ஞானவான்களும், மகரிஷிகளும்,ஏன் அவதாரங்களும் கூட கிடைத்தார்கள். இந்த துளிகளெல்லாம் தங்களை கடலில் கலக்க விட்டு அந்த கடலே 'நான்' என ஆரம்பித்து விட்டார்கள். அது நானே! இது நானே! நானே அதுவாயிருக்கிறேன்! நானே இதுவாயிருக்கிறேன் இப்படி ஏகப்பட்ட வசனங்கள்.
சமீப காலத்தில் கூட ரமணர் போன்ற சிலர் அன்பர்கள் அந்த அநுபூதி நிலைக்கு வரவேண்டிய உதவிகளை மட்டுமே தன்னை தேடி வந்தவர்களுக்கு அருளினார்கள்.
எவரெல்லாம் மீண்டும் அந்த 'நான்' ஐ விட முடியாமல் செயல்பட்டார்களோ, செயல்படுகிறார்களோ அவர்களை நீங்கள்தான் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
இந்த ஸ்தூல நிலைக்கும் அந்த சூட்சும நிலைக்கும் இடையான தடுமாற்றமே இந்த புதுவித நான் உருவாவதற்கு காரணம். இந்த தடுமாற்றத்தில் தடுக்கி விழுந்த சாமிகள் ஏராளம். இதிலும்கூட ஒரு சூட்சும பிரச்னை இருக்கிறது அதையும் நேரம் வரும்பொழுது எழுதுவோம்.
எல்லாவற்றையும் உதறிய பின்பே அறுதி நிலை வாய்க்கும் என்பது சத்தியம். இடையில் சில நோக்கங்களுக்காக சிலர் தங்களை கடவுளாக்கிக் கொள்கிறார்கள். இதெல்லாம் அவர்கள் மனசாட்சிக்கே வெளிச்சம்.
No comments:
Post a Comment