Thursday, July 29, 2010

48 : நியதி

இப்பிரபஞ்சம் காரண, காரியங்களால் இயங்குவது. ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் உண்டு. இதுவே இதன் நியதி. நமது மனமும் இப்படியே. இதுவும் காரண, காரியங்களால் இயங்குவது. ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் உண்டு. இதுவே இதன் நியதி. இவ்விரண்டுக்குமே நியதி ஒன்றுதான். இப்பிரபஞ்சத்தின் மூல ஆதார நிலையும்,இம்மனத்தின் மூல ஆதார நிலையும் ஒன்றுதான். அங்கு காரண, காரியங்களுக்கு இடமில்லை. அது கூறுபடாத ஓர்மை.

Tuesday, July 27, 2010

47 :தெய்வம் - அதன் சொரூபம்.

நம் செயல்களுக்கு காரணம் வினைப்பயனும் இப்போது செய்யும் முயற்சியுமே. இவ்விரண்டைத்தவிர எந்த காரியத்திற்கும் அனுகூலமாகவோ, பிரதியனுகூலமாகவோ இருப்பதற்கு வேறொரு காரணமுமில்லை. நடக்க வேண்டிய காரியங்கள் இவ்விரண்டின் பலத்தை தழுவியே நடந்து தீரவேண்டும். எதற்கு தீவிரம் அதிகமோ அது ஜெயமடைகிறது. ஆனால் வினைப்பயன்
நம் நோக்கத்திற்கு எட்டாதது. அதை நாம் எவ்விதமும் மாற்ற முடியாது. வினைப்பயன் அளவில்பட்டது, வளராது. முயற்சியோ நம்முடைய வசம். இம்முயற்சியை யுக்தி புத்தி, விடாமுயற்சிகளோடு செய்து வந்தால் , வினைப்பயனை நசிப்பித்துக் காரியங்களில் ஜெயம் அடையலாம் . பெரும்பாலும் ஜனங்கள் தங்களுக்கு விளைவதெல்லாம் தெய்வசெயலாக கருதி செய்ய வேண்டியவைகளை , செய்யாமல் மதி கெட்டு இருக்கிறார்கள். அதாவது வினைப்பயன்களே தெய்வசெயலாக கூறப்படுகின்றன. ஆனால் இவ்வினைப்பயன்களோ, நம்முடைய பூர்வ பிரயத்தனங்கள். ஆகையால் நமது தேகம் ஒரு பூர்வ -பிரத்யட்ஷ வினைகளின் போர்க்களமாயிருந்து அப்போரின் முடிவே நமது வாழ்வாக ஏற்ப்படுகின்றது.

தெய்வம் - அதன் சொரூபம்.

நமக்கு வேண்டியவைகளை தேடிக்கொள்ள நம் பிரயத்தனத்தால் முடியுமேதவிர வேறோன்றினாலும் முடியாது. தீவிர முயற்சியே தெய்வம். இதையே ஒவ்வொருவரும் ஆசிரயிக்க வேண்டும். நமது முயற்சியில்லாமல் ஒரு காரியமும் சித்தி பெறாது. நம் புத்திக்கு புலப்படாமல் தெய்வம் எங்கிருந்தோ நம் செயல்களுக்கு பலனை அளிப்பதாக எண்ணுவது மூடத்தனம். இதைவிட அக்ஞானம் வேறில்லை. நம்மால் செய்யப்படும் காரியங்களெல்லாம் நம் இந்திரியங்களால் செய்யப்பட வேண்டும். இந்திரியங்கள் மனத்தால் ஏவப்படுகின்றன. மனது புத்தியின் அசைவு. நாம் அனுபவிப்பதெல்லாம் கிரியைகளின் பலனே. ஆகையால் புத்தியின் அசைவுதான் பலன் ரூபமாக அனுபவிக்கப்படுகின்றது. நியதி இப்படி இருக்க , தேயவத்தால் நடைபெற வேண்டியது என்ன? மனித பிரயத்தனங்கள் இல்லாமல், எப்பொழுது அவர்கள் (மனிதர்கள் ) காரியங்கள் யாதும் முடிவதில்லையோ , அப்பொழுது தெய்வாதீனம் என்னும் கொள்கையால் என்ன பயன்? குறிப்பு:- யோக வாசிஷ்டம் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

Saturday, July 24, 2010

46: யோக வாசிஷ்டம் தமிழ் நூலின் முகவுரை.

மனது எனும் சொரூபத்தையுடையவனே மனிதன். இம்மனதானது அறிவின் வேறுபாடு.ஆகையால், தன் சுய நிலையாகிய அறிவை அறிந்துகொள்வதே மனித உருவமாக இயங்கினதன் நோக்கம், இதுதான் மனித ஜென்மத்தின் குறியும் பலனும்.
ஜன்ம சாபல்யம் இப்படி இருக்க, அறிவுதான் அனைவராலும் அறியப்படாமல் இருக்கிறது. லட்சக்கணக்கான வருடங்கள் மானிட உருவத்தில் கழிந்தும் , இந்த 'அறிவு' எனும் சொரூபத்தை அறிந்து அதை அடையும் முறைகளைப்பற்றி உரைத்தவரோ, எழுதினவரோ இதுவரையில் எத்தேசத்திலும் தென்படவில்லை. அதாவது வசிஷ்டர் ஒருவரைத்தவிர. இதர உலக வியவகாரங்களைப்பற்றியும் , மானிட வாழ்க்கையைப்பற்றியும் , அதை சீர்திருத்திக்கொள்ளும் முறைகள், இன்னும் அநேகவித சித்தாந்தங்கள் பற்றியும் எல்லாம் , அநேக மகான்களிடமிருந்து கேட்டோ, படித்தோ இருக்கிறோம். ஆனால் பிரபஞ்சத்திற்கு சாரமாயுள்ள அறிவைப்பற்றி நாம் அறியோம். வசிஷ்டர் ஒருவரே இதைப்பற்றிப்பூர்ணமாக எடுத்துரைத்தவர்.
அதாவது வால்மீகி மகரிஷியால் கேட்டு எழுதப்பட்ட காவியமாகிய " யோக வாசிஷ்டம் " அல்லது "மகாராமாயணம்" என்பதே இங்கு குறிப்பிடப்படுவது. இந்நூலை தரவிறக்கிக்கொள்ள இங்கே அணுகவும்.......... http://www.scribd.com/doc/11815811/YOGA-VASISTAM-TAMIL-BOOK?secret_password=&autodown=pdf

Friday, July 23, 2010

45:சத்,சித், ஆனந்தம்.

சத்,சித், ஆனந்தம். என்பன மூன்று பதங்கள். சத்தின் விளக்கம் ( நான் இருக்கிறேன் என்ற உணர்ச்சி ) எல்லோருக்கும் உண்டு .சித் விவேகிக்கு விளங்கும். ஆனந்தம் பூர்ண போதமுடையவனுக்குதான் விளங்கும். இம்மூன்றையும் உடையவனுக்கு அமிர்தமயமான ,அத்தியந்த , துக்க நிவர்த்தி என்று இதற்கு ஒரு மகான் பொருள் கூறினார்.
1,சத், என்பது நமது இருப்புணர்வு. மற்றும் அது மனவிவகாரமும் கூட. உலக மாந்தர் அனைவருமே இதை கையிலெடுத்துக்கொண்டு அலைகின்றனர். இதுவே கதி இதை விட்டால் வேறு மார்க்கம் கிடையாது என நினைக்கின்றனர். இதிலிருக்கும் உணர்ச்சியே வாழ்வு என கருதுகின்றனர். இதை தாண்டி அவர்கள் பார்ப்பதே கிடையாது. இதனால் ஏற்பட்டதே இந்த சமூகம். உங்கள் சமூக வாழ்க்கை.
2,சித், என்பது-தியானத்தின்போது-நமக்குள் இருக்கும் எழுபது லட்சம் கோடி ஜீன்களின் விழிப்பு. உங்கள் உடலின் அனைத்து பாகங்களிலிருந்தும், அனைத்து இடங்களிலிருந்தும் எல்லா ஜீன்கள் விழிக்கின்றன. உடலின் முழு பாகமும் விழித்தவுடன் , மனம் உங்களை விட்டு விலகி விட்டதை அறிவீர்கள். 'சித்'தில் நீங்கள் முழு ஈடுபாட்டுடன் இருக்கும்பொழுது மனதை நீங்கள் தேடினாலும் கிடைக்காது, எழுபது லட்சம் கோடி ஜீன்களின் விழிப்பு ( ஒளி ) ஆரவாரத்தில், நிழலான மனம் கரைந்துபோயிருப்பதை காண்பீர்கள். சித் என்பது எழுபது லட்சம் கோடி ஜீன்களின் விழிப்பு.
3,ஆனந்தம் என்பது எழுபது லட்சம் கோடி ஜீன்களின் அடிப்படை உயிர் ஆதாரம் ஒன்றாக இணைவது. அது ஆனந்த தாண்டவம். இது மொழிகளின் அர்த்தங்களைஎல்லாம் தாண்டிய மாபெரும் அனுபவம்.

Thursday, July 22, 2010

44:நமது பாதுகாப்புணர்வு.

நாம் காரண , காரிய பிரபஞ்சத்தில் வாழ்கிறோம். ஒரு சிறு துரும்பு கூட காரணமின்றி அசைவதில்லை. அனைத்து நடப்புக்குமே அடிப்படையில் காரணம் இருக்கிறது. இங்கு பூமியில் நீங்கள் விரலை சொடுக்கினால் கூட அதன் பாதிப்பு சூரியனில் நிகழ்கிறது என்கிறது அறிவியல். ஒவ்வொரு 'இம்மி'யளவு அசைவுமே காரணத்துடனே நடக்கிறது. ஏதோ தன்னிச்சையான பிரபஞ்சமாக இருக்க முடியுமா இது? இந்த பிரபஞ்சத்துக்குள் உங்கள் வருகையும் இப்படியே. உங்களுக்குள் உங்கள் மனதின் வருகையும் இப்படியே. இந்த மனதுக்கு காரணம் என பின்னோக்கிப்பார்த்தால் ஒருசெல்( முதல் ) உயிரிலிருந்து , ஏன்? இந்த பூமியில் முதன்முதலில் உயிர் துவங்கிய பொழுதே உங்கள் துவக்கமும், உங்கள் மனதின் துவக்கமும் சூல் கொண்டுவிட்டது. இன்று இருக்கும் உங்கள் மனதின் தகவமைப்பு , பல பிறவிகளாக பரிணாமமடைந்து,பரிணாமமடைந்து வந்திருக்கிறது. அது ஒரு செல் உயிரிலிருந்து இன்று எழுபது லட்சம் கோடி உயிரிகளாக ( உயிரிகளின் தொகுப்பாக) பரிணாமமடைந்து வளர்ந்திருக்கிறது.
இவ்வளவு பிறவிகளில் அது ( மனம்) கண்ட அனுபவம் தனித்து நின்று உயிர் வாழ முடியாது என்பதே. ஒரு குழுவாக இருந்தே தொடர்ந்து உயிர் காத்தல் அவசியம் என்பது அதன் அனுபவ சாரம். இதன் காரணமாகவே , ஒரு செல்லில் துவங்கிய 'உன்' துவக்கம் பல செல் உயிராக பல்கி பெருகி குழு, குழுவாக தொகுப்பு, தொகுப்பாக பரிணாமமடைந்து தொடந்து வந்திருக்கிறது.
அதனால்தான் மனிதன் தன்னை காத்துக்கொள்ள , குடும்பம், ஜாதி, இனம், மொழி, கட்சி, தேசியம் என குழுவாக சேர்த்துக்கொள்கிறான். அந்த குழுவில் தலைவனாகி விட்டால் தனக்கு உச்ச பட்ச பாதுகாப்பு கிடைக்குமென நினைக்கிறான். இந்த பாதுகாப்பு மனோபாவத்தால்தான் இவன் அடுத்தவனை அடக்கி ஆள துடிக்கறான். இந்த அடக்கி ஆளும் மனோபாவமே சமூகத்தில் இன்று மலிந்து கிடக்கிறது.
மனிதன் குழு மனப்பான்மையிலேயே வளர்கிறான்,
இதன் விளைவே உலகை பலமுறை( அனைத்துயிரையும் ) அழிக்கவல்ல அணு ஆயுதங்கள். பல நாடுகளில் அங்கங்கே தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

43: மனிதகுலத்தின் அடிப்படை உண்மை : கௌதம புத்தர்

உடலை உண்டாக்கும் பஞ்ச பூதங்களை கலைத்தால்தான் பிறவி அறும். இல்லையேல் பிறவி தொடர்ந்து வந்து துக்கத்தை அளித்துக்கொண்டே இருக்கும். பஞ்ச பூதங்களை சேர்த்து வைக்கும் சக்தி, மனிதன் 'தனித்து' வாழ வேண்டும் என்று விரும்பும் ஆசையே. ஆகவே ஆசையை அழித்து விட்டால் பஞ்சபூதங்கள் கலைந்துவிடும். மறுபிறவி ஏற்படாது .
நன்றி:- தினமணி, ஆன்மீக சிந்தனை,22-07-2010

Wednesday, July 14, 2010

42 : அனுபவத்தாலறிவது.

நாம் அடிப்படையில் மூன்று வித தன்மையில் இருக்கிறோம்.1, ஜடம், 2, அறிவு, 3, இரண்டும் கலந்த ( உடல், உயிர்).அறிவும் ஜடமும் இணைந்து உணர்வாகிறது. நாம் பெரும்பாலும் இந்த இரண்டும் கலந்த உயிர் தன்மையிலேயே 'உணர்ந்து' வாழ்ந்து வருகிறோம்.நம்மிடம்அறிவானது இந்த உயிர் தன்மையின் உணர்வு சார்ந்தே இது நாளும் செயல்பட்டு வருகிறது. இவ்வுணர்வையொட்டியே 'மனம்' எழுகிறது. அந்த மனமே வழிகாட்டியாகிறது. மனதின் கட்டமைப்பை உருவாக்கியதும், பராமரிப்பதும் உணர்வுதான். அறிவு இதனூடாக செயல்படுகிறது. அறிவு தனி நிலையது.
ஜடம் இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் மாதிரி தன்மூல சமநிலை நோக்கி 'கலைகிறது'.அறிவோ இந்த உயிரை செயல்படுத்தி தனது மூல சுத்த சுயத்தை அறிய தவிக்கிறது. இதனாலேயே பருவம் மற்றும் மூப்பு வருகிறது. இந்த தனி நிலையறிவை கவனித்தால் உரையிலிருந்து உருவிய வாளைப்போல ( உடலை, உயிரையும் விட்டு தனித்தும் காணப்படுகிறது ).
அப்போது உயிர் தனித்து வெறும் அறிவற்ற உணர்வு செயலாக மட்டும் இருக்கிறது. இந்த உணர்வு செயலில் எந்த எண்ணமும் கலப்பில்லை. காலில் தைத்த முள்ளை வெளியில் எடுத்தது போல தினவு நீங்கி சுகதன்மையை உணர்கிறது உயிர்.