Thursday, March 31, 2011

Monday, March 28, 2011

Tuesday, March 22, 2011

‘நான்’ உருவான கதை.

நம்மிடம் இரண்டு 'நான்'கள் இருகின்றன. நமக்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அறியாமையான 'நான்' எனும் கருதுகோள். இன்னொன்று கர்த்தா. இந்த நான்-இல்லாத ஒன்றை இருப்பதாக புனையும் கருத்து. அது நமது எண்ணங்களால் உருவாக்கப்பட்டது. அந்த எண்ணங்களுக்கு ஆதாரம் நினைவகத்தில் உள்ள படிம நினைவுகள். நினைவு ( memory ) என்பது இறந்த காலத்தினுடையது. இந்த நினைவு தொகுப்பே நான். இதே தொகுப்பை வேறொரு படிமுறையில் உங்களால் தொகுக்க முடிந்தால், நீங்கள் வேறொரு நானாக உங்களை கருதுவீர்கள்.

இந்த நானின் மையம் உங்கள் பாதுகாப்பை முன்னிருத்தியதாக இருப்பதை கவனியுங்கள்.

உங்களை சுற்றி உள்ளவைகளோடு நீங்கள் போராடி உங்களை காத்துக்கொள்ள வேண்டியிருந்ததால் உருவான பாதுகாப்பு மையம் அது. முதன் முதலில் உங்களுக்கு எப்போது ஆபத்து வந்ததை அறிந்தீர்களோ அப்போது விழுந்த விதை அது. - தவிரவும் இந்த தன்மை பரம்பரை பரம்பரையாக கை மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது - இந்த நான் இந்த உடலை மட்டும் நான் என கருதுவதையும் கவனியுங்கள். இந்த நான் எனும் பாதுகாப்பு தன்மை தனக்கென ஒரு சட்ட திட்ட வளையத்தை உருவாக்கி வைத்துக்கொண்டுள்ளது. அந்த வளையம் தான் நான். இந்த நானுக்கு இது தான் எல்லை.


இந்த பூமியில் நாம் காணும் அனைத்து தாவர வகை உயிரினங்கள், நுண்ணுயிரினங்கள், நகர்வன, பறப்பன, நீந்துவன, நடப்பன மற்றும் விலங்குகள், மனிதர்கள் என உயிருள்ள அனைத்துக்குமே நான் என்ற தன்மை இருக்கிறது. உயிருள்ளதற்கெல்லாம் இந்த நான் தன்மை இருக்கிறது.

உயிருக்கும் ஜடத்திற்கும் உள்ள வித்தியாசமே இந்த நான் தன்மை தான்.

சரி இந்த நான் எப்படி செயல்படுகிறது என காண்போம். நீங்கள் காலையில் விழித்தெழுந்து வாசலில் நின்று பல் துலக்கிக்கொண்டிருந்தீர்கள். உங்களுக்கு நாலாயிரம் ரூபாய் தரவேண்டிய முத்துசாமி சாலை வழியே போகும்பொழுது உங்கள் பார்த்து விட்டு 'காணாததைப்போல்' போகிறான். விட்டு விடுவீர்களா?
உங்கள் மனம்- இந்த நான்- உடனே செயல்பட தொடங்குகிறது. “பார்த்து விட்டு 'காணாததைப்போல்' போகிறான். இவன் நமக்கு பணம் கொடுப்பானென்று என்ன நிச்சயம்? அவனை உடனே துரத்தி பிடித்து பணத்தைககேள்” என உங்களுக்கு உங்கள் மனம் கட்டளை இடுகிறது.

அந்த எண்ணம் உங்களுக்கு எப்படி தோன்றியது?

நீங்கள் காலையில் உங்கள்பாட்டுக்கு வாசலில் நின்று பல் துலக்கிக்கொண்டிருந்தீர்கள்.உங்களுக்கு நாலாயிரம் ரூபாய் தரவேண்டிய முத்துசாமி சாலை வழியே போகும்பொழுது உங்கள் பார்த்து விட்டு 'காணாததைப்போல்' போகிறான்.அவனைப்பார்த்ததும் உங்கள் மூளையில் அவனைப்பற்றிய நினைவுத்தொகுப்பு திறக்கப்பட்டு அவனைப்பற்றி அனைத்து தகவல்களும் உங்களுக்கு தொகுத்து தரப்பட்டு "பார்த்து விட்டு 'காணாததைப்போல்' போகிறான். இவன் நமக்கு பணம் கொடுப்பானென்று என்ன நிச்சயம்? " என உங்களை உசுப்பியும் விடுகிறது.

இந்த தகவல் உங்கள் பெரு மூளையிலிருந்து நியூரான் செல்களில் பதிந்து ( நியூரான் செல் தொடர் வழியாக ) ஒரு மின்னோட்டம் மூலம் உணர்வுககுப் போய் உணர்வின் வழியாக உடல் உறுப்புகளுக்கு போய், பின் அது செயலாக மாறி - எப்படியோ துரத்திப்பிடித்து முத்துசாமியை "இன்னும் ஒரு வாரத்தில் பணத்தை கொடுத்து விடுகிறேன்" என சொல்ல வைத்து விட்டீர்கள்.

1, எண்ணம் தோற்ற நிலைப்பாடு : எண்ணம் > பாதுகாப்பு > சுயம் > நினைவகம் > பெரு மூளை.
உங்களில் எண்ணம் தோன்றுவதற்கு உங்கள் பாதுகாப்புணர்வு காரணமாக இருக்கிறது.
உங்கள் பாதுகாப்பு தன்மைக்கு உங்கள் சுயம் காரணமாக இருக்கிறது.
உங்கள் சுயம் உருவாவதற்கு நினைவக தொகுப்பே ( கருத்துரு) காரணம்.
உங்கள் நினைவகம் பெரு மூளையில் இருக்கிறது.

2,எண்ணம் செயல் நிலைப்பாடு : எண்ணம் > உணர்வில் மாற்றம் > உடல் செயல்.
எண்ணத்தினால் உணர்வில் மாற்றம்.
உணர்வினால் உடலில் மாற்றம்.
உடல் மாற்றமே செயலாக பரிணமிக்கிறது.

இந்த நான் தன்னை கர்த்தா என எண்ணிக்கொள்கிறது. இந்த நான் எனும் கருதுகோள் கர்த்தாவாக முடியுமா?

உங்கள் கடந்த கால நிறைவேறாத ஆசைகளே நான் எனும் கருத்துருவாக உருவாகி உள்ளது. ஏற்கனவே முடிந்துபோன காலாவதியான தகவல்களை திரட்டி அதற்கொரு வடிவம் கொடுத்தால் அதுதான் நீங்கள். ஏற்கனவே நிறைவேறாத ஆசைகள் மீண்டும் நிகழ்ந்து அவைகள் முற்றுப்பெறுமா?

இறந்த காலத்தை நிகழ்காலத்தில் நிகழ வைக்க துடிக்கும் உங்கள் அறியாமையை என்ன சொல்ல!.

உங்களோட இந்த ‘நான்’ வெறும் எண்ணம் மட்டுமே!

உணமையான கர்த்தாவோ இவை எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருக்கிறது.

எல்லாம் தெளிவாகிவிட்டது.


சரி , உங்களின் ‘நான்’ அறியாமை எங்கு தொடங்கியது என தெரியுமா?


எல்லாம் பாதுகாப்பாக இருக்கிறது. நாமும் எந்த ஆபத்தும் இல்லாது இருக்கிறோம். ‘சரி இப்போ நாம் என்ன செய்யலாம்?’ என உங்கள் சுயம் நினைத்த போது, “எனக்காக நீ இனி செயல்படலாம்” என உங்களது நிறைவேறாத ஆசைகளின் தொகுப்புகள் சூழ்ந்து கொண்டு உங்கள் சுயத்தை செயல்பட வைத்தது.

இதுதான் உங்களின் ‘நான்’ உருவான கதை. இல்லாத ஒன்றை இருப்பதாக புனைந்த கருத்து இதுதான்.

Friday, March 18, 2011

ஒளி தரிசனம்.

இந்த 'நான்'மற்றும் 'எனது' எனும் அறியாமைகளை நாம் விட்டெறிவதன் மூலம் - இந்த ஒளி தரிசனம் மூலம் - நமக்கு என்ன கிடைக்கிறது ?

நமது மனதில் உள்ள இருள் அகலுகிறது.
ஒளி துலங்க, துலங்க மனம் தெளிவுறுகிறது.
குழப்பங்கள் முடிவுக்கு வருகின்றன!
அறிவு மேலும், மேலும் விளக்கம் அடைகிறது.
தேவையற்ற சந்தேகங்கள் தொலைகிறது.
உங்கள் மனதை சதா தூண்டிக்கொண்டிருக்கிற தீய பதிவுகள் ஒளிப்பட்டு நசிக்கிறது. வினைப்பயன்கள் ( தீவிர ஒளி தரிசனத்தால் ) செயலற்ற நிலைக்கு வருகிறது.
எதிலும் ஒரு நிதானப்போக்கு உண்டாகிறது.
ஒரு சாந்த சொரூபம் வருகிறது.
மனிதன் முழு மனிதனாக மாற வாய்ப்பு கிட்டுகிறது.

Tuesday, March 15, 2011

முண்டக உபநிஷத்தில் ஒரு பாடல்.

ப்ரணவோ தணு: சரோ ஹ்யாத்மா ப்ரஹ்ம தல்லக்ஷ்யமுச்யதே /
அப்ரமத்தேன வேத்தவ்யம் சரவத் தன்மயோ பவேத் // 4 //

ஒளிமயமான பிரம்மத்தை அடைவது என்பதை வில்லில் நாண் ஏற்றி, இலக்கை வீழ்த்துவதற்கு ஒப்பிட்டு இந்த பாடலில் கூறப்பட்டுள்ளது. முதலாவதாக
நாணை வில்லில் இழுத்து கட்டவேண்டும். அடுத்து அம்பை நாணில் வைத்து குறி பார்க்கவேண்டும். இலக்கும் அம்பும் ஒரே நேர்க்கோட்டில் வந்தபிறகு அம்பை பின்னால் இழுத்து எய்ய வேண்டும்.

வில் : ஓங்கார மந்திரம்
நாண் : மனம்
அம்பு : உணர்வு
இலக்கு : ஒளிமயமான பிரம்மம்.

இதில் ஒவ்வொரு கட்டமும் முக்கியமானவை.

1, நாணை வில்லில் இழுத்து கட்டவேண்டும்.

மனதை அந்த ஓங்காரத்தில் நிலை நிறுத்துதல் வேண்டும். உங்கள் மனமே முழுவதும் ஓங்காரமாக திகழ வேண்டும். உங்கள் உடலிலுள்ள ஒவ்வொரு செல்லும் ஓம் ஓம் என ஒரே லயத்தில் உச்சரிக்க வேண்டும். மனம் ஓங்காரத்தில் கரைந்து அத்தனை செல்களும் ஓங்காரத்தில் அதிர வேண்டும். ஒட்டுமொத்த நீங்களும் வெறும் ஓங்காரமாகமட்டும் இருக்க வேண்டும்.

2, அம்பு மிக கூர்மையானதாக இருக்கவேண்டும்.

உணர்வை ஒன்று திரட்டுதலே அம்பாக இருக்கிறது. உணர்வு ஆழமானஅதன் ஆழ்நிலையான இக்கணம், இக்கணம் எனும் விழிப்புணர்வாக இருக்கவேண்டும். இன்னும் ஆழ்ந்து அதிர்வாக,- உங்கள் அனைத்து செல்களும் இதே உணர்வாக, இதே அதிர்வாக -அதிர்வில் ஒர்மையாக துல்லிய தன்மை( கூர்மை ) இருக்க வேண்டும்.


3, அம்பை நாணில் வைத்து குறி பார்க்கவேண்டும்.

முதுகு தண்டு நேராக வைத்து நிமிர்ந்து அமர்ந்து, உணர்வு இக்கணம், இக்கணம் எனும் விழிப்புணர்வாக (இலக்கு) பிரம்ம தாகமாக உருவாகி, முதுகு தண்டின் அடிப்பகுதியான மூலதாரத்திலிருந்து புருவ மத்தியை ( பிரம்ம துவாரம் - ஆக்ஞா ) நோக்கி பொருத்துதல் வேண்டும்.

4, இலக்கும் அம்பும் ஒரே நேர்க்கோட்டில் வந்தபிறகு

வலிமையாக பலத்தை ஒன்றாக திரட்டி,சற்றும் பிசகாமல் ஒரே கவனத்துடன், இலக்கை நோக்குதல் வேண்டும். ஓம் எனும் வில்லை வளைப்பதின் மூலம், வில்லுக்கு கட்டுக்கடங்காத விசை உருவாகிறது - ஓம் எனும் சொல்லை தொடர்ந்து லயமாக உச்சரிக்க, உச்சரிக்க இந்த மந்திர ஓசையுணர்வு உங்கள் உடல் முழுவதும், அதிர்வை உண்டாக்கி உங்கள் மனத்துக்கு,உணர்வுக்கு ஒரு ஓர்மை நிலையை தருகிறது. இந்த ஓர்மை நிலையே இலக்கின் நேர்கோடு என்பது.

5, அம்பை பின்னால் இழுத்து எய்ய வேண்டும்.

மனம் ஓம் என்ற ஒசையதிர்வில் லயித்து, தன் சுபாவம் விட்டு ( தன் சுபாவம் என்பது எப்பொழுதும் வெளி நோக்கி செயல்படுவது. வெளியில் தன்னை சுற்றி நடக்கும் அனைத்து செயல்களிலும் தனது நினைவு தொகுப்பை சதா ஒப்பிட்டு பார்த்துக் கொண்டேயிருப்பது. ) உணர்வோடு கலந்து உணர்வுக்கு உந்து சக்தியை தருகிறது.
.
உணர்வு இப்போது தனது 'மேலான' இலக்கு நோக்கி பாய எத்தனமாக இருக்கிறது. வில்லின் விசையும், தன் அறியாமையை விலக்கிய மனமும் உணர்வின் மேலான கூர்ந்த நோக்கும் ஒர்மையாக ஓர் செயலாக இணைந்திருப்பதை காண்கிறோம். இந்த செயலில் உள்ள ஒவ்வொரு அணுவுமே இலக்கை நோக்கியே செயல்பட தயாராக இருக்கிறது.

6, இப்போது நாணிலிருந்து அம்பு விடுபட்டால் நோக்கம் நிறைவுறும்.

அதாவது நமது சராசரி வாழ்வில் மனமும் உணர்வும் இணைந்தே செயல்பட்டு வருகிறது . பெருமூளை நமது நினைவகமாக இருக்கிறது. மனம் பெரு மூளையை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. உணர்வை மனம் தனது வசம் வைத்திருக்கிறது. தண்டுவடம் அனிச்சை செயல்களை கவனித்துக்கொள்கிறது.

அம்பு இப்போது பாயப்போகிறது.

அது நாணின் விசையை கொய்துக்கொண்டு பாய்ந்துவிடும். அம்பும் நாணின் விசையும் அந்த பிரம்மத்தில் சங்கமித்து விடும்.

அதாவது நான் எனும் மனதின் அறியாமையும், எனது எனும் மனதுக்கு கட்டுப்பட்ட உணர்வு கற்றைகளும் அந்த ஒளி பிரம்மத்திடம் சமர்ப்பிக்கப்பட்டால், எங்கும் நீக்கமற பிரம்மம் - பிரம்மம் மட்டுமே -திகழுவதை காணலாம்.

Monday, March 14, 2011

உணர்வு மண்டலம்.

நாம் நமது தியான வேளைகளில் அந்த பிரபஞ்சத்தின் மூல நாதமான 'ஓம்' எனும் சப்தத்தை நமது உடல் முழுவதும் எதிரொலிக்க, அதிர, தொடர்ந்து உச்சரித்து நமது நரம்பு மண்டலம் முழுமையும் ஒளியாக அதிர்வாக மாற்றமடைய செய்யுங்கள்.

நிமிர்ந்து அமர்ந்து முதுகு தண்டை நேராக வைத்து கவனம் முழுவதையும் புருவ மத்தியில் வைத்து , உணர்வு மண்டலமான நரம்பு மண்டலத்தில் உள்ள உணர்வுகள் அனைத்தையும் முதுகு தண்டின் வழியாக மேலேற்றி புருவ மத்திக்கு கொண்டுவாருங்கள்.

உங்கள் புருவ மத்தியில் இப்போது ஒரு துளி ஒளி திகழும். அந்த துளியில் உங்கள் அறிவையும், உங்கள் உணர்வு முழுவதையும், உங்கள் சுவாசத்தையும் இணைய விடுங்கள்.

உங்கள் ஒட்டு மொத்த சாராம்சமும் அந்த ஒளித்துளிதான். வெளியிலிருந்து கேட்கும் எந்த சப்தத்தையும் உங்களை கடந்து போக அனுமதியுங்கள். நீங்கள் இப்போது வெட்ட வெளியாக இருக்கிறீர்கள். இதை நித்தம் பழக்கப்படுத்துங்கள்.

Sunday, March 13, 2011

நமது நரம்பு மண்டலம்.

மொத்தம் 120 வகையான செல்கள் நம் உடம்பில் செயல்படுவதாக பார்த்தோம். இதில் முக்கிய பணிகளை ஆற்றும் செல், நியூரான் செல்லாகும்.
மூளை மற்றும் நரம்புகள் நியூரான் செல்களால் ஆனவை.
செய்திகளை கடத்துவது நியூரான் செல்கள்.

உறுப்புகளில் இருந்து தண்டு வடத்திற்கு வரும் நரம்புகள் உணர்வு நரம்புகள்.
நரம்பு செல்களால் ஆக்கப்பட்ட நரம்பு திசுக்களின் பணி உணர்சிகளை கடத்துவது.
நமது உடம்பில் உள்ள நரம்புகள் அனைத்தும் முதுகு தண்டுவடத்தின் வழியாகவே மூளையை அடைகிறது. தண்டுவட நரம்புகள்(31 இணைகள்)


உடற்செயல்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஒரே தொகுப்பு நரம்புறுப்புத் தொகுப்பு ஆகும்.

தலையில் உள்ள உறுப்புகளான கண், காது, மூக்கு, வாய் போன்ற உறுப்புகளிலிருந்து பன்னிரண்டு நரம்புகள் மூளைக்கு செல்கின்றன . இவை கபால நரம்புகள் எனப்படும்.

மூளையில் நிறைந்திருப்பது நியூரான் செல்களே!

நினைவாற்றல் செயலுக்கு காரணமாக அமைவது பெருமூளை.
பகுத்தறிவின் இருப்பிடம் பெருமூளை.

அனிச்சை செயல் என்பது பெருமூளையின் தொடர்பின்றி உடலில் நடைபெறும் செயல்.
அனிச்சை செயலுக்கு காரணமாக இருக்கும் நரம்பு மண்டலத்தின் உறுப்பு தண்டுவடம்.
தண்டுவடத்தின் மைய குழலில் நிரம்பியுள்ள திரவம் மூளை தண்டுவட திரவம்.

ஆக! நமது அறிவும் உணர்வும் நியூரான் செல்கலாலேயே பராமரிக்கப்படுகிறது.
நமது தண்டுவடம் மூளை மற்றும் நரம்பு மண்டலம் முழுவதும் நியூரான் செல்களால் ஆனவை.

ஆகவே! நாம் நமது தியான வேளைகளில் அந்த பிரபஞ்சத்தின் மூல நாதமான 'ஓம்' எனும் சப்தத்தை நமது உடல் முழுவதும் எதிரொலிக்க, அதிர, தொடர்ந்து உச்சரித்து நமது நரம்பு மண்டலம் முழுமையும் ஒளியாக அதிர்வாக மாற்றமடைய செய்யுங்கள். இப்போது உடம்பிலுள்ள அனைத்து செல்களும் பூரண விழிப்புக்கு வந்து விடும்.

Friday, March 11, 2011

கண்ணாடியின் முகம்.

நமது தியானத்தின் பொழுது நாம் ( மனதையும், உணர்வையும் கடந்த ) ஒளிநிலையில் திளைக்கும்பொழுது நமது இருப்பு தன்மையும், கவனத்தன்மையும் ஒரு நிலைக்கண்ணாடி போல விளங்குவதை காணலாம்.

நிலைக்கண்ணாடி போலஅசைவற்ற( நிலையான ) இருப்பும், நடக்கும் அனைத்தையும் பிரதிபலிக்கும் தன்மையும், பிரதிபலிக்கும் அனைத்தையும் கவனிக்கும்(அசைவற்ற ) சாட்சித்தன்மையும் கொண்ட ஒரு நிலைக்கண்ணாடி போலநாம் இருப்பதை காணமுடியும்.

அந்த சாட்சித்தன்மை அளவேயில்லாது எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது.

அச்சமயம் நம்மை ஒரு நிலைக்கண்ணாடியாக பாவித்துக்கொள்ளல் வேண்டும். ( நமது மூல உண்மையும் அதுதான். ) கவனிக்கும் சாட்சித்தன்மைக்கு எந்த வித உணர்வு பேதமோ, எந்த வித அறிவு பேதமோ கிடையாது. அது எந்த நிகழ்வை கண்டாலும் சற்றும் சலனப்படுவதில்லை.

அது, நான் எனது என்ற சுயமற்றது. அதுவே அனைத்துமாக இருப்பது.

அதிலிருந்து எதுவும் விலகியிருப்பது இல்லை. அனைத்துமாயிருப்பது அது.

நமது மனதுக்கு காட்சிப்படுவது வெறும் தோற்ற நிகழ்வுகளே!

ஆனால்,அந்த சாட்சித்தன்மைக்கு அதுவே யது. அது , அதுவே அதாக இருப்பதால் அதற்கு பேதமில்லை. நடக்கும் நிகழ்வும் அதுவே! காணும் சாட்சித்தன்மையும் அதுவே!. சுற்று சூழ இருக்கும் பௌதிக உலகும் அதுவே!அனைத்து நிகழ்வுகளும் அதுவே!

வெறும் சாட்சித்தன்மையுடன் மட்டும் விளங்கும் ஒரு மகானின் முகம் கண்ணாடியின் முகத்தைப்போன்று இம்மியும் சலனமற்று தோன்றும்.

Monday, March 7, 2011

உடம்பு

நம்முடைய இந்த உடம்பு இன்று இப்படி இருப்பதற்கு காரணம், நமது பரம்பரை பரம்பரையான சிந்தனை அமைப்பும், பழக்க வழக்கங்களுமே. நமது இந்த உடல் ஒரு உயிருள்ள கருவி.(Bio instrument) உங்களுக்கு இதன் தொழில் நுட்பம் தெரிந்தால், இதன் தன்மையை எளிதில் மாற்றி வைக்க முடியும்.

இதன் தொழில்நுட்பம் மிக எளிமையானது. உடலை எப்படி பழக்கப்படுத்துகிறீர்களோ அப்படியே பழக்கமாகி மாறிவிடும். உடம்புக்கு எந்தவித தனி நோக்கும் கிடையாது. அது ஒரு உயிர்ப்புள்ள கருவி அவ்வளவே!. இதை பழக்கத்தால் மட்டுமே மாற்ற முடியும். நீங்கள் காலையில் ஆறு மணிக்கு எழும் பழக்கமுள்ளவரா? தொடர்ந்து ஒரு பதினைந்து நாட்கள் சரியாக அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து பழகுங்கள் பின் நீங்கள் கஷ்டப்படவே வேண்டியதில்லை, சரியாக மூன்று மணிக்கு நீங்களாகவே அனிச்சை செயலாக எழுந்து விடுவீர்கள்.

உங்கள் உடலில் செல்கள் புதிது புதிதாக உருவாகிகொண்டேயிருக்கிறது. நீங்கள் எப்படி பழக்கப்படுத்துகிறீர்களோ அப்படியே அது பழகிக்கொள்ளும்.

நீங்கள் நித்தமும் ஒரு குறிப்பிட்ட சரியான நேரத்தில் தியானம் செய்துவர , நீங்கள் உங்களை பொருட்களாலான உருவமாகவோ, அல்லது அலைகளாலான ஒளியாகவோ உங்களை உருவகித்து வந்தால் உங்கள் உடல் அதற்கு பழக்கப்பட்டுவிடும்.

உங்களை நீங்கள் எல்லையுடைய உருவமாகவும் பாவிக்கலாம், அல்லது எல்லைகளற்ற ஒளியாகவும் பாவிக்கலாம். இந்த ஒளி நிலையை தொடர்ந்து பழக்கப்படுத்தி தனது தேகத்தையே ஒளியலையாக மாற்றி தேகத்தையே ஒளியலையாக மாற்றி ஒளியோடு ஒளியாக இணைத்து காட்டியவர் அருட்பெரும் வள்ளலார் அவர்கள்.

Sunday, March 6, 2011

அலை - நிழல் - உரு .

நமது தியானத்தின்போது நாம் ஒளிஅலையாகவும், நிழலாகவும், பின் உருவாகவும் மாறுவதை காணமுடியும். கணநேரம் அலையாகவும், அடுத்து கணநேரம் நிழலாகவும், பின் அது உருவாகவும் மாற்றமடைவதை நாம் அறிய முடியும். அலையாக நம்மை அறியும்பொழுது நமக்கு எல்லைகளே இல்லாது இருப்பதை அறியலாம். நிழலாக இருக்கும்பொழுதும் நாம் எல்லைகளை அறிவதில்லை. நம்மை உருவாக அறியும்போழுதே நமக்கு எல்லைகள் உண்டாவது தெரிகிறது.

Thursday, March 3, 2011

புவி ஈர்ப்பு விசையும், பிரபஞ்ச ஈர்ப்பு விசையும்.

நாம் இப்பொழுது புவி ஈர்ப்பு விசைக்கு உட்பட்டு, இன்றைக்கு நமக்கு இருக்கும் உணர்வு நிலைமையை அனுபவித்து வருகிறோம். இந்த வலி, சுகம் என்பது மாதிரி நமக்கு இப்போதைய உணர்வு இருக்கிறது. இந்த உணர்வுகள் அனைத்துமே இந்த புவிஈர்ப்பு விசை நமது முதுகு தண்டின் கீழ்பகுதியான மூலாதாரம் எனும் முதுகு தண்டின் நுனி பகுதியில் துவங்கி படிப்படியாக மேலேபோய் மூளையை அடைவதால் ஏற்படுவது. இது மூலாதாரத்தில் வலுவாகவும், மூளைப்பகுதியில் குறைந்தும் நமது மூளையிலுள்ள நியூரான் அணுக்களை புவிஈர்ப்பு விசையானது கீழ்நோக்கி இழுத்துவருகிறது. இதனால் நமது உணர்வு நமது உடலைமட்டும் சார்ந்ததாக, எல்லைகள் உடையதாக இருக்கிறது. இது ஒரு குறையான உணர்வே!

நாம் நமது தியானத்தின்போது அந்த பிரபஞ்ச ஈர்ப்புவிசையை நமது உச்சந்தலை தொடக்கி முதுகு தண்டு வழியாக கீழிறக்கி மூலாதாரத்தில் நிறுத்தி, நமது முழு கவன நிலையையும் மூலாதாரத்தில், குவித்து நிறுத்தி அனைத்து செல்களையும் அதிர்வில் எழுப்பி மேல்நோக்கி, புருவ மத்தி, அல்லது உச்சந்தலையை நோக்கி முழு பிரபஞ்ச ஈர்ப்பு விசையையும் நாம் ஏற்றுக்கொண்டோமானால், அந்த ஈர்ப்புவிசை மூளைப்பகுதியில் வலுவாகவும், படிப்படியாக குறைந்து கொண்டே கீழ்நோக்கி மூலாதாரத்தை அடைகிறது.

இப்போது நமது உணர்வு தகவமைப்பே தலை கீழாக மாறுவதை காணமுடியும்.

இப்போது, நீங்கள் உங்களின் உணர்வு எல்லையை கவனித்தீர்களானால், நமது உணர்வு ஒரு எல்லையற்ற தளத்தில் விரிவடைந்து கொண்டேயிருப்பதை காண முடியும்.

அங்கு எந்த எல்லைகளும் இல்லை. நீங்களே இப்போது ஒரு எல்லையற்ற தன்மையில் இருப்பதையும் காண்பீர்கள்.

இந்த எல்லையற்ற தன்மையில் நீங்கள் நிலைத்திருக்கும்பொழுது இயல்பாக ஒரு எண்ணம் உங்களில் தோன்றினால் கூட, அடுத்து அது தொடர் எண்ணமாக மாறுவதில்லை, தொடர்வதுமில்லை.

இதற்கு காரணம்,

உங்கள் உணர்வுக்கு எல்லையிருந்தால், ஒரு எண்ணம் தோன்றினால், அந்த எண்ணம், உணர்வில் விழுந்து அந்த எல்லைகளில் மோதி, எதிரெண்ணமாக தொடர்கிறது. உங்கள் உணர்வுக்கு எல்லையில்லாத போது அந்த உணர்வில் விழும் எண்ணம் அங்கேயே மரித்து விடுகிறது.

எல்லையற்ற உணர்வே முழுமையானது, நிறைவானது, பூரணமானது. அங்கு எந்த கேள்வியும் இல்லை. கேள்விகேட்க, எந்த ஹேதுக்களும் இல்லை.

இயற்கையினால் நமக்கு விதிக்கப்பட்ட உணர்வே இந்த முற்றுணர்வுதான். நாம் அறியாமையில் சிக்கி இருக்கிறோம்.

இந்த முற்றுணர்வை நோக்கியே அனைத்துயிரும் பயணித்துக்கொண்டிருக்கிறது.

புவியில் தற்போது வசிக்கும் தாவர விலங்குகளின் எண்ணிக்கை 1200000 ( பன்னிரண்டு லட்சம் ) வகைகள்.