Thursday, September 30, 2010

நமது சாராம்சம்.

நமது வாழ்வின் ஒட்டுமொத்த சாராம்சமும் நாம் எவ்வளவு அறிந்திருக்கிறோம், நாம் எவ்வளவு உணர்ந்திருக்கிறோம் என்பது மட்டுமே! ( அது எதற்காக உதவுகிறது ? )

அறிவது , உணர்வது இந்த இரண்டுக்கு மேல் எந்தவித சாந்நித்தியமும் கிடையாது இந்த வாழ்க்கையில். உங்களுக்கு இயற்பியல் தெரியலாம், வேதியல் தெரியலாம், கணக்கியல் தெரியலாம், சமூகவியல் தெரியலாம், மரபியல் தெரியலாம், மானிடவியல் தெரியலாம் இவையாவும் நமது அறிவால் அறிவது.

அதேபோல உணர்வு விஷயத்திலும் நீங்கள் எந்தெந்த விதமான, பலவித உணர்வுகளை எல்லாம் உணர்ந்திருக்கலாம். எல்லா இயல் அறிவுகளுமே உங்களுடைய வாழ்க்கைக்காக நீங்கள் தேடி அறிந்தது.

தியானத்தில் சுத்தமான தன்னறிவில் முழு மனத்தையும் அசைவின்றி நிலை நிற்க வைத்தால், உங்களின் பலவித அறிவு ஏகமாகி முற்றறிவாக திகழும். இனி உங்களுக்கு தெரியாதது எதுவுமில்லைஇந்த உலகில். இனி, நீங்கள் புதிதாக அறிய எதுவுமில்லை.

அதேபோலத்தான் உணர்வு விஷயமும். தியானத்தில் அமர்ந்து உங்களின் உணர்வனைத்தையும் திரட்டி மேல்நோக்கி புருவ மத்தியை நோக்கி செலுத்தி அங்கேயே அசைவற்று நின்றால் , உங்களின் பல்வேறுவித முரணான உணர்வுகள் ஒன்றுகூடி ஒரே ஏகவுணர்வாக திகழும். அவ்வுணர்வு முற்றுணர்வாகும். அதுவே பரிபூரண நிலை. அங்கிங்கெனாதபடி எங்கும் ஒருணர்வான கைவல்யம் அதுவே!

இப்போது உங்களுக்கு எந்த பேதமுமில்லை. நீங்கள் வேறு பிரபஞ்சம் வேறில்லை.ஆதிசங்கரர் சொன்ன 'அத்வைத நிலை' இதுவே!

இதுவரை நம்மில் இந்த மின் சக்தி அறிவாகவும், காந்த சக்தி உணர்வாகவும் பிரிந்து செயல்பட்டு வந்ததை அறிவீர்கள். தியானத்தில் உங்களுக்கு கைவல்ய நிலை சித்திக்கும்போது எலக்ட்ரிக் வெல்டிங் செய்யும்போது கவனித்து பாருங்கள் எலக்ட்ரிக் 'லாடை' பற்றவைக்கும் இரும்பின் மீது வைக்கும்பொழுது 'பட்டென' ஒரு சப்தம் வந்து அந்த லாடும், பற்றவைக்கும் இரும்பும் ஒட்டிக்கொள்ளும்.

அதேபோல நம் தியானத்தின் போதும் புருவ மத்தியில் நமது மின் சக்தியும்,காந்த சக்தியும்(அறிவும், உணர்வும்)இதுவரை தனி, தனியாக இருந்துவந்தது இப்போது ஒன்றாக கலந்து 'பட்டென' தெறித்து விழும். இனி உங்கள் உணர்வும் அறிவும் பிரிந்து செயல்படாது, ஒன்றாகி செயல் படும்.

ஒரு மகானின் திருஷ்டிக்கும், நம்மைப்போன்ற சாதாரண மனிதரின் திருஷ்டிக்கும் உள்ள வேறுபாடு இதுதான். நமக்கு உலகமாக விரிந்து காணப்படும் இந்த 'பொருளான' உலகு , மகான்களுக்கு இந்த உலகின் அடிப்படை வஸ்துவான மின்காந்த தளமாகவே அறியப்படும்.

Thursday, September 16, 2010

மரணம்

மரணத்தை குறித்து பயப்படுபவர்கள் அடிப்படையில் வாழ்வைக்குறித்து பயப்படுபவர்களே. அவர்கள் வாழவில்லை. எனவேதான், அவர்கள் மரணத்துக்கு பயப்படுகிறார்கள். இந்த பயம் இயற்கையானதே. நீ சிறிதும் வாழவில்லை என்றால், நீ கண்டிப்பாக மரணத்திற்கு பயந்தேயாக வேண்டும். ஏனெனில் மரணம் நீ வாழ்வதற்குரிய வாய்ப்பை பறித்து சென்றுவிடும். ஆனால் நீ இன்னும் வாழ்வே இல்லை. எனவே மரணம் வந்து விட்டால் , பிறகு நீ எப்போது வாழ்வது?
ஆழமாக வாழ்ந்த ஒருவன் மரணத்திற்கு பயப்படுவதில்லை. அவன் நிறைவாயிருக்கிறான். மரணம் வந்தால் அவன் அதை வரவேற்க முடியும். ஏற்றுக்கொள்ள முடியும். இங்கு வாழ்க்கை கொடுக்கக்கூடியது. எல்லாவற்றையும் வாழ்க்கை கொடுத்துவிட்டது. வாழ்விலிருந்து அறியக்கூடிய எல்லாவற்றையும் அவன் அறிந்து விட்டான். இப்போது அவனால் மரணத்திற்குள் சுலபமாக செல்லமுடியும். அவன் மரணத்திற்குள் செல்லவிரும்புவான்.
நன்றி : தந்த்ரா ரகசியங்கள் : ஓஷோ

Wednesday, September 15, 2010

உணர்வு பற்றிய அடிப்படையான விஷயம்.

நமது உணர்வை நாம் ஒரு அசைவற்ற நிலையிலிருந்து அகண்டு விரித்து உணர முடியும். அசைவற்ற நிலைதான் நமது அடிப்படை நிலை. ( இருக்கிறது என்கிற அளவேயான உணர்வு நிலை ) அடுத்து இருக்கிறோம் எனும் விகல்ப நிலை. ( உணர்வும், உணர்வோனும் எனும் விகல்ப நிலை ) இது எப்படி சாத்தியப்படுகிறது எனில் - நமக்கு நேரிடை உணர்வு மட்டுமன்றி , நினைவு சக்தியும் இருக்கிறது. அந்த ஞாபக சக்தி மூலம் ஏற்கனவே நமக்கு கிடைத்த உணர்வை ஞாபகப்படுத்தி மீண்டும் உணர்ந்து பார்க்க முடிகிறது.

இது ஒரு பொய் தோற்றம்.

இதை நமது மனமே செய்வதால், -இந்த உணர்வு உண்மையா? பொய்யா? என்பதையும் தீர்மானிக்கும் சக்தியாக அந்த மனமே இருப்பதால் ,- இந்த ( பொய் ) உணர்வும் நமக்கு மெய்யெனவே தோன்றுகிறது.

அடுத்து நான் இருக்கிறேன் எனும் மன உணர்வு ( இப்போது நேரிடை உணர்விலிருந்து சற்றே விலகி -மனமே முழு ஆளுமையையும் எடுத்துக்கொள்கிற நிலை ) அடுத்து நான் இருக்கிறேன், இந்த உலகு இருக்கிறது எனும் , தன்னிலை, முன்னிலை, படர்க்கை என விரிகிறது இந்த உணர்வு நிலை.

இந்த படர்க்கை நிலையில் உணர்வை அனுசரிப்பவர்களால் தனக்கு வெளியே ஏதாவது தனக்கு ஒவ்வாத நிகழ்வு நடக்கும்போது, அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் உடனே எரிச்சலடைகின்றனர். இதையே கனவு, கற்பனை என இன்னும் விரிவாக அனுபவிக்கும் மகானுபவர்களும் உண்டு.

ஆனால் நமது அடிப்படை உணர்வான ( அனைத்தின் அடிப்படையான உணர்வுமான ) 'இருக்கிறது' என்கிற உணர்வே எப்போதும் இருந்தது, இப்போதும் இருக்கிறது, எப்போதும் இருக்கும். அது அசைவற்ற நிலை. அது முழு நிறைவானது. அனைத்தையும் உள்ளடக்கியது. பரிபூரணமானது. அதற்கு உள்ளும், அப்பாலும் எதுவுமில்லை. இருக்கிறது என்பதைத்தவிர வேறெதுவுமில்லை. இந்த உணர்வு எல்லா மனிதருக்கும் உள்ளதே! இதை அறிந்துணர்வதே ஆன்மிகம் என்பது.

இதில் எந்த மதமோ, எந்த கடவுளோ, எந்த புனிதமோ, எந்த அவதாரமோ, எந்த ரட்சகமோ இல்லை, இல்லை, இல்லை. ( இவையெல்லாம் ஒரு வித்தியாசமான பொய். அவ்வளவே ) எனவே மனித குலத்தோரே அறிவால் அறிந்து எல்லா பொய்களையும் கடந்து உண்மையை அறிந்து வாழ்வீராக!.

Monday, September 6, 2010

மனிதனின் (வெல்லமுடியாத) பாலுணர்வு

நம்மிடம் இரண்டுவிதமான செயல்தன்மைகள் உள்ளது. ஒன்று: அறிவுசெயல்தன்மை. மற்றது : தானியங்கு செயல்தன்மை. இதுவரை செய்தறியாத புதிய வேலைகளை அறிவுசெயல்தன்மை செய்கிறது. உதாரணமாக நீங்கள் சைக்கிள் ஒட்டிப் பழகுவது , கார் ஒட்டிப் பழகுவது போன்றவைகள். அதாவது ஒரு செயல் பழக்கப்படும் வரை அறிவுசெயல்தன்மை அவ்விஷயத்தில் செயல்படுகிறது.

அது பல முறை செய்து பார்த்த பின் அது பழக்கமாகி தானியங்கு செயல்தன்மைக்கு வந்து விடுகிறது.

உங்களுடைய தானியங்கு செயல்தன்மை செய்யும் சில செயல்களை தெரிந்து கொள்வோம். வழக்கம்போல - காலையில் எழுந்து முகம் கழுவி , பல் துலக்கி என ஆரம்பித்து இரவு படுத்து உறங்கும் வரை - ஏன் உறக்கத்திலும் கூட உங்கள் தானியங்கு செயல்தன்மை தான் செயல்படுகிறது. நீங்கள் எந்தெந்த செயலில் முழு கவனம் வைத்து உங்களை ஈடு படுத்துகிறீர்களோ அந்த செயல்கள் மட்டுமே அறிவுசெயல்தன்மையின் செயல்களாகும்.

இது( இவ்விரு செயல்தன்மையும் ) உங்கள் பல்லாயிர பிறவிகளுக்கு முன் நீங்கள் 'புறப்பட்ட' அந்த ஒரு செல் உயிரியிலிருந்தே துவங்கி விட்டது. அந்த ஒரு செல் உயிரியிலிருந்தே தொடர்ந்து வரும் பழக்கமே இந்த சுந்தரனும், இதைப்படிக்கும் நீங்களும். நமக்குள் இருக்கும் வித்தியாசமும்.

அந்த பழக்கங்கள் உங்களை வழி நடத்துகின்றன. எதுவெல்லாம் உங்களுக்கு ( முப்பிறவிகளிலும் ) ஏற்கனவே பழக்கமானதோ அதுவெல்லாம் மீண்டும் உங்கள் வாழ்வில் நடக்கும்பொழுது நீங்கள் சகஜ நிலையை உணர்கிறீர்கள். பழக்கமில்லாத ஒன்று நடந்தால் உங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. நீங்கள் பல்லாயிர பிறவிகள் எடுத்துவிட்டதால் ( பிறவி தவறாமல் வந்த ) இனப்பெருக்கம் உங்களுடைய நீண்ட பழக்கம்.

( இது உங்கள் மைய்ய பழக்கம் ) இதனாலேயே, இதை அடிப்படையாக கொண்டே உங்கள் மன அமைப்பு செயல்படுகின்றது. இந்த பழக்கத்திற்கு வசப்படாத உயிர்களே நீங்கள் காண முடியாது.

இதனாலேயே இந்த பாலுணர்வு நம்மால் வெல்ல முடியாததாக இருக்கிறது.

த்யானத்தின் ஒரு அடிப்படையான விஷயம்.

தினசரி காலையில் தியானிப்பது யார்? த்யானிக்க அமரப்போவது வரை என்னவோ இந்த 'சுந்தரம்' தான். த்யானம் கூடிவருகையில் கவனித்தால் தான் தெரிகிறது த்யானிப்பது சுந்தரமல்ல! இந்த சுந்தரத்திற்க்குள் இருக்கும் எழுபது லட்சம் கோடி ஜீன்கள் என்பது. இந்த சுந்தரம் என்பது அந்த எழுபது லட்சம் கோடி ஜீன்களின் தொகுப்பான மன அமைப்பு. அந்த முதல்உயிரி அமீபாவிலிருந்து பயணித்து இன்றுவரை தொடர்ந்து சுய தேடலில் இருப்பது இந்த ஜீன்கள் தான்.

பல்லாயிரமான பிறவிகளும் இந்த ஜீன்களுக்குதான் இந்த சுந்தரத்துக்கல்ல!

இந்த பிறவியில் இந்த ஜீன்களின் தொகுப்பான இந்த மனதின் பெயரே சுந்தரம். நீங்கள் பல பிறவிகள் எடுத்து விட்டீர்கள் என்றால் அது உங்களுள் இருக்கும் ஜீன்களுக்கே பொருந்தும்.

த்யானத்திலும் த்யானிப்பது ஜீன்களாக இருந்தால்தான் அது த்யானம். அது சுந்தரமாக இருந்தால் த்யானமே கூடி வராது. ஏனெனில் சுந்தரம் ஒரு மன அமைப்பு. மனதை கடந்தால்தான் த்யானம் கூடும். மன அமைப்பை கடந்து பார்த்ததால் அங்கிருப்பது இந்த ஜீன்களே!.

இந்த ஜீன்களின் சுய தேடலே ' அசைவற்ற, சாட்சித்தன்மையான அந்த ஒளிப்பொருந்திய சுத்த அறிவேயாகும்'. அது எங்கும் நீக்கமற நிறைந்து பூரணமாக இருப்பது.

அதுவே பூர்ணம்.